கொல்கத்தா: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மேற்குவங்க மாநிலத்தில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து நாளை தேர்தல் நடைபெறுஙட 152 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இவிஎம் இயந்திரங்கள் உள்பட தேர்தல் பொருட்கள் அனுப்பி வைக்கும்பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பதற்றம் நிறைந்த பல தொகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதுடன், கடுமையான கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

294 தொகுதிகளைக்கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29ஆம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 அன்று (நாளை) தேர்தல் நடைபெறுகிறது.
2வது கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 02 தொடங்கிய நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. இந்த தொகுதிகளில் ஏப்ரல் 29ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இரு கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவுகள் மே 4ந்தேதி எண்ணப்படுகிறது.
இந்த நிலையில் மேற்குவங்கத்தில் முதல்கட்டமாக வாக்குப்பதிவுநடைபெற உள்ள 152 தொகுதிகளில், மொத்தம் 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3.60 கோடி பேர் வாக்குரிமை பெற்று உள்ளனர்.
பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த தொகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே பல்வேறு இடங்களில் மோதல்கள் நடைபெற்றன. இதை கருத்தில் கொண்டு முதல்கட்ட தேர்தலில் மத்திய பாதுகாப்புப் படைகளை சேர்ந்த 2.4 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும், இன்றும் நாளையும் இரவு 6 மணி முதல் காலை 6 மணி வரை மோட்டார் சைக்கிள்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மோட்டார் சைக்கிள்களில் ஒருவர் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும். பின்இருக்கையில் யாரையும் ஏற்றக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ தேவை, குடும்ப விழாக்கள், பள்ளிகளுக்கு மாணவ, மாணவியரை அழைத்துச் செல்வது ஆகிய பணிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல வீட்டு உபயோக பொருட்கள், உணவு வகைகளை விநியோகம் செய்யும் ஊழியர்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் மேற்குவங்க மாநிலம் பரபரப்பாக காணப்படுகிறது.
[youtube-feed feed=1]