சண்டிகர்: ‘கண்ணுக்கு தெரியாத அவசரநிலை’ போன்ற சூழ்நிலை உருவாக்கப்படுகிறது, அமைதியான பஞ்சாபிகளை துன்புறுத்தக் கூடாது, பஞ்சாபில் என நேற்று இரவு பாகிஸ்தானின் எல்லையான அமிர்தசரஸ் அஜ்னாலா பகுதியில் ஆய்வு செய்த பஞ்சாப் துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா மத்தியஅரசுக்கு கண்டனம்  தெரிவித்து உள்ளார்.

ஜூன் 27 அன்று, இந்திய விமானப்படையின் ஜம்மு விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் டிரோன் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பாகிஸ்தானிலிருந்து ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் எல்லைகளுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள், போதைப் பொருட்களை கடத்த டிரோன்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அண்டை நாட்டுடன் உள்ள எல்லைகளில் இந்தியா பாதுகாப்புப்படையினரை அதிகரித்துள்ளது.

அதன்படி, பஞ்சாப், மேற்கு வங்காளம், அசாம் மாநில எல்லைகளில் 50 கிலோ மீட்டர் வரை நமது எல்லைக்குள் பாதுகாப்பு படையினர் சோதனை, கைது, பறிமுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி  வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 15 கிலோ மீட்டர் தூரம் என்பதை 50 கிலோ மீட்டர் தூரம் என அதிகரித்துள்ளதற்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மத்திய அரசு,  இதை திரும்பப் பெற வேண்டும் என பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கண்டனம் தெரிவித்திருந்தார். மத்திய அரசின் ஒருதலைபட்சமான இந்த முடிவு கூட்டாட்சி மீதான தாக்குதல். இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில், பஞ்சாபின் பாகிஸ்தானின் எல்லையான அமிர்தசரஸ் அஜ்னாலா பகுதியில் பஞ்சாப் துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா ஆய்வு செய்தார்.  அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தவர், “பிஎஸ்எஃப் எல்லையில் மட்டுமே இருக்க வேண்டும் & மீதமுள்ள பகுதிகள் பஞ்சாப் காவல்துறைக்கு சட்டம் & ஒழுங்கை பராமரிக்க விட வேண்டும் என வலியுறுத்தினார்.

பாதுகாப்பு படையினர், எல்லைப்பகுதியில் உள்ள தங்களது வீடுகளுக்குள் நுழைவார்கள், கிராமங்களை சுற்றி வளைத்து சோதனைகளை நடத்துவார்கள் என்று மக்கள் பயப்படுகிறார்கள். பிஎஸ்எஃப்  கிராமங்களுக்குள் நுழைந்தால், தேடுதல் நடத்தினால், வழக்குகளைப் பதிவு செய்தால் அல்லது நிலையங்களை அமைத்தால், அது நாட்டின் கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்தும்  என்று கூறியதுடன்,  பஞ்சாபில் ‘கண்ணுக்கு தெரியாத அவசரநிலை’ போன்ற சூழ்நிலை உருவாக்கப்படுகிறது, அதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. அமைதியான பஞ்சாபிகளை துன்புறுத்தக் கூடாது.  பஞ்சாப் போலீசின் கைகளில் பஞ்சாப் பாதுகாப்பாக உள்ளது.

பிஎஸ்எஃப் பஞ்சாப் மக்கள் மீது கவனம் செலுத்தாமல் எல்லைக்கு அப்பால் இருந்து வரும் மருந்துகள், ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்களில்  கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.