அருள்மிகு காமாட்சி அம்மன் கோயில் , மாங்காடு

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு என்னும் ஊரில் பூந்தமல்லி அருகே அமைந்துள்ளது அருள்மிகு மாங்காடு காமாட்சி அம்மன் கோவில்.  சென்னை நகருக்கு தென்மேற்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இதை ஆதிசங்கராச்சாரியார் நிறுவியதாக கருதுகின்றனர். இங்கு அன்னை பார்வதி தவம் இருந்து காஞ்சி ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டதாக புராண வரலாறு கூறுகின்றது.

காமா என்ற வார்த்தைக்கு அன்பு, ஈர்ப்பு, காந்தத்தன்மை என்று பொருள். காமாட்சி என்றால் வசீகர கண்களைக் கொண்டவள் என்பது பொருள் ஆகும். மாங்காடு காமாட்சி அம்மன் தவசக்தியின் பெண்மை வடிவமாக போற்றப்படுகிறாள். சென்னையில் உள்ள அம்மன் தலங்களில் மிக பிரபலமான தலம் இது . ஆதி காமாட்சி, தவக்காமாட்சி, தபசு காமாட்சி என வேறு திருப்பெயர்களும் உண்டு. மாமரங்கள் நிறைந்த மாமரக்காடாக விளங்கியமையால் இத்தலம் “மாங்காடு” என்னும் காரணப் பெயர் பெற்றது.

ஈசனை மணப்பதற்காக தேவி ஒற்றைக்காலில் நெருப்பின் மீது நின்று தவமிருந்த இடம் தான் இந்த மாங்காடு. ஐந்து குண்டங்களில் தீ வளர்த்து நடு குண்டத்தின் நடுவில் தன் இடது காலின் கட்டை விரலால் நின்று தன் வலது காலை இடது காலின் தொடை பகுதிக்கு மேல் வைத்து இடது கையை நாபி கமலத்திற்கு அருகிலும் வலது கையில் ஜபமாலையுடன் தன் சிரத்துக்கு மேலே வைத்து தன் கண்களை மூடி அய்யன் ஈசனை திருமணம் செய்ய கடும் தவம் புரிந்தார்.

இக் காட்சியை கோவிலின் உள்ளே உற்சவர் சிற்பமாக காணலாம் . தேவி இங்கு மேற்கொண்ட கடுமையான தவத்தின் மூலம் மனம் இரங்கிய ஈசன், இதற்குப் பின்புதான் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரராக காமாட்சியை மணந்து கொண்டார் என்பது வரலாறு. காஞ்சிபுரத்தில் காஞ்சி காமாட்சி அம்மனுக்கு எவ்வளவு மகத்துவம் இருக்கின்றதோ, அப்படித்தான் மாங்காடு காமாட்சி அம்மனும்.

காஞ்சி சென்ற அன்னை, தான் தவம் செய்த பஞ்சாக்னியை அணைக்காமல் சென்றதால் மாங்காடும் அதன் சுற்றுப்பகுதிகளும் தீயினால் வறண்டன. ஆதி சங்கரர் தேசந்திரம் செல்லும் போது, அந்த நேரத்தில் அங்கு சென்றார். காமாட்சி அன்னையின் தவ அனல் குறைவதற்காக சிவசக்தி அம்சமான அர்த்தமேரு என்ற 43 திரிகோணங்கள் கொண்ட, சக்தி வாய்ந்த இந்த அர்த்தமேரு அபூர்வ மூலிகைகள் கொண்டு செய்யப்பட்டுள்ளது.

மாங்காட்டின் நிலையறிந்து அஷ்டகந்தம் எனப்படும் சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிலாஜித், ஜடாமாஞ்சீ, கச்சோலம் ஆகிய மூலிகைகளால் ஆன அர்த்தமேரு ஸ்ரீ சக்ரத்தை அம்மை தவம் புரிந்த இடத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார். இதன் காரணமாகவே இந்த மேருவுக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு, ஜவ்வாது, சந்தனம் உள்ளிட்டவை மட்டுமே சாத்தப்படுகிறது. இதனால் தீயின் கொடுமை மறைந்து மக்கள் சுபிட்சம் பெற்றனர் என்பது இக்கோவிலின் வரலாறு.

பின்னர் காமாட்சி அன்னையும் ஸ்ரீசக்ரமும் கொண்ட கோயிலை சோழ அரசர்கள் ஸ்ரீவித்யா முறைப்படி அமைத்தனர் என்கிறார்கள். சில காலம் முன்பு வரை கூட பக்தர்கள் இங்கு வந்து எண்ணியது நிறைவேறினால் ஸ்ரீசக்ர மேருவை புனுகுவால் மெழுகுகிறேன் என்று வேண்டிக் கொள்வார்களாம். தவசக்தியின் அடையாளமாக விளங்கும் மாங்காடு அர்த்தமேரு காமாட்சி அன்னையின் சூட்சும வடிவமாகும்.

இந்த அர்த்த மேருவில்தான் அன்னை காமாட்சி வாசம் செய்கின்றாள். காமாட்சியம்மனின் திருஉருவம் அர்த்த மேருவான ஸ்ரீசக்கரத்திற்குப் பின்புறமாய் தவக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றது. அன்னை காமாட்சியம்மனின் மகிமைகளை அளவிட்டுக் கூற இயலாது.

ஸ்ரீ சக்கரமே இக்கோயிலின் பிரதானமான அம்பாள் ஆவார். ஆமை உருவத்தை அடித்தளமாக அமைத்து, அதன் மேல் மூன்று படிக்கட்டு கட்டி, அதன் மேல் 16 இதழ் தாமரை அமைத்து, அதன் மேல் 8 இதழ் தாமரை அமைத்து, அதன் மேல் ஸ்ரீசக்கரம் வரையப்பட்டுள்ளது. குங்குமம் அர்ச்சனை மற்றும் 18 முழம் புடவை சாத்தப்படுகிறது .

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன்:

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகள் இந்தக் கோயிலில் விசேஷ நாட்கள் ஆகும்.  இக்கோயிலில் 6 வார வழிபாடு பிரபலமானது . எதாவது ஒரு கிழமையில் எலுமிச்சம் பழத்துடன் வந்து அம்பாளை தரிசனம் செய்து அதே கிழமைகளில் ஒரு மண்டலம் அதாவது ஆறு வாரங்கள் தொடர்ந்து வந்து பூஜை செய்தால் வேண்டியவைகள் நிறைவேறும் என்று அழுத்தமாக நம்பப்படுகிறது.

வேலை இல்லாதவர்கள் ,குழந்தை இல்லாதவர்கள் ,பதவி உயர்வு , உடல் உபாதை உள்ளவர்கள் , கல்யாண தோஷம் உள்ளவர்கள் பிராத்தனை செய்கிறார்கள் . குறிப்பாக வேலை கிடைக்க இந்த 6 வார வேண்டுதல் செய்கிறார்கள். ஸ்ரீசக்கரத்திற்கு விஜயதசமி அன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது அன்று மட்டும் தங்க கவசத்தில் காட்சி தருவார் மற்ற நாள்களில் வெள்ளி கலசம் சாத்தப்பட்டிருக்கும்.

மேலும் பவுர்ணமியன்று மாலையில் இங்கு நவகலச ஹோமம் நடைபெறுகிறது. ஒன்பது கலசங்களில் ஒன்பது சக்திகளை ஆவாஹனம் செய்து ஹோமமும் ஸ்ரீசக்ரத்திற்கு புஷ்பாஞ்சலி செய்கின்றனர். புரட்டாசி பௌர்ணமியில் இங்கு நடக்கும் நிறைமணி தரிசனத்திற்கு இனிப்புகள் வழங்கி, பழங்கள், காய்கறிகள், தானியம் இவற்றில் அர்த்தமண்டபம், தபசு மண்டபம், மற்றும் முன் மண்டபத்தை அலங்காரம் செய்கின்றனர். இந்த தரிசனத்தை கண்டால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை.

நவராத்திரி 9 நாட்களும் அம்மன் வெவ்வேறு விதமாக காட்சித் தருவாள். இத்தலத்தில் எல்லா மாதமும் திருவிழாக்கள் நடந்த வண்ணம் உள்ளது. தை மாதம் முதல் ஆடி மாதம் வரை வெள்ளிக் கிழமைகளில் 108 கலச அபிஷேகம் நடைபெறும். ஆடிப்பூரம் தினத்தன்று 1008 கலச அபிஷேகம் நடைபெறும். ஆடிப் பூரத்தன்று அம்மனுக்கு வளையல் சாத்தி, வழிபாடுகள் செய்வது இங்கு மிகவும் விசேஷமாகும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மற்றும் பிரதி மாதம் பௌர்ணமி நாளில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

எலுமிச்சம் பழத்தில் மகிமை :

அம்மனிடம் பிரார்த்தனை செய்து கொள்பவர்கள் முதல் வாரம் செல்லும் பொழுது பூஜைப் பொருட் களுடன் இரண்டு எலுமிச்சை பழம் எடுத்து செல்ல வேண்டும். வீட்டுக்கு எடுத்து வந்த எலுமிச்சம் பழத்தையே தேவி காமாட்சியாக வைத்து ஆறு நாட்களும் பூஜித்து வரவேண்டும். ஆறு வாரம் சென்று அம்மனை வழிபட்ட பின் ஏழாவது வாரம் பசும்பாலைக் குங்குமப்பூ, கற்கண்டு சேர்த்துக் காய்ச்சி மற்ற பூஜைப் பொருட்களுடன் எடுத்து செல்ல வேண்டும்.

பிரார்த்தனைகள் :
அம்மனுக்கு புடவை சாத்துதல், பால் அபிஷேகம், அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.  மாங்காட்டு காமாட்சியை வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் தரிசனம் செய்வது சிறப்பு அம்சமாகும்.