‘சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக இன்று இரவு சென்னை மாநகர பேருந்து சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,   மெட்ரோ ரயில் சேவை மற்றும் மின்சார ரயில் சேவைகள் தொடரும் என அதன் நிர்வாகங்கள் அறிவித்து உள்ளது.

வங்கக்கடலின் அந்தமான் அருகே உருவான காற்றழுத்ததாழ்வுமண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதற்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னையில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ளது. இது மாமல்லபுரம் நோக்கி மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகசென்னை உள்பட பல மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில்,நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையானது  இன்று மதியம் முதலே பலத்த காற்றுடன் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதையடுத்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், மாண்டஸ் புயல் கரையை கடப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவும், பின்பாகவும், கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது.

இந்த நிலையில் ரயில்சேவை இருக்குமா என பொதுமக்களிடையே பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வந்தன. அதை தீர்க்கும் வகையில், புறநகர் மின்சார ரயில் சேவை மற்றும், மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள சென்னை ரயில்வே,  சென்னையில் புறநகர் ரயில்களை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  தெரிவித்துள்ளது. சென்னை புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் வகையில்,  பாதுகாப்பாக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிக்னல் கோளாறு ஏற்பட்டால் சூழலைப் பொருத்து முடிவு செய்யப்படும். அவசியம் ஏற்பட்டால் ரயில்கள் ரத்து செய்யப்படும் அல்லது நேரம் மாற்றியமைக்கப்படும் என்று கூறியுள்ளது. புயல் மற்றும் கனமழை நேரத்தில் மணிக்கு 10 கிமீ முதல் 15 கிமீ என ரயிலின் வேகம் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம்,மாண்டஸ் புயல் காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் எந்த மாற்றமும் இல்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெவித்துள்ளது. மெட்ரோ ரயில் அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை வழக்கம்போல் இயங்கும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளளனர்.