சென்னை: தொழில் செய்ய உகந்த மாநில பட்டியலில் தமிழ்நாடு 3-வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்து உள்ளார்.

சென்னை வேளச்சேரியில், இந்திய தொழிலக கூட்டமைப்பு (CII) மற்றும் நாணயம் விகடன் இணைத்து. “Managing Challenges, Driving Growth”  என்ற பெயரில் 12வது நிதி மாநாட்டை(Financial Conclave) நடத்தியது. இதில் சிறப்பு விருந்தினராக   தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக இந்த மாநாட்டில் தற்போதிருக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கு மத்தியில் உலக சந்தையை புரிந்து கொள்ளுதல், டிஜிட்டல் நிதி மற்றும் வணிகம், CEO/CFO பங்குதாரர்கள் மற்றும் பங்குதாரரின் எதிர்பார்ப்புக்கள், ஜி.எஸ்.டி, வருமான வரி, ESG-யின் தற்போதைய போக்குகள் ஆகியவை பற்றி பேசப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய பிடிஆர், “தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் தமிழக்தில் உள்ள மக்களுக்கு பிற மாநில மக்கள்களை விட அதிக வாங்கும் திறன் உள்ளது. தமிழ்நாடு கடந்த 18 மாதங்களில் எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல், லெதர் ஆகிய துறைகளில் மிகவும் முன்னேறியுள்ளது.

தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் 14-வது இடத்திலிருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் 15% தொழிற்சாலை தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. இந்த தொழிற்சாலைகளில் சுமார் 22 லட்சம் பேர் பணிபுரிகிறார்கள். மேலும் கடந்த 15 மாதங்களில், தமிழ்நாடு 10 பில்லியன் டாலர் அந்நிய முதலீடுகளை ஈர்த்து சுமார் 2 லட்ச வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பு ஆகும். அதை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தவிர இந்த தொழில்களுக்கு கடன் வழங்குவது சம்மந்தமாக தொடர்ந்து வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது” என்று பேசினார்.

தென்னிந்திய தொழிலக கூட்டமைப்பு முன்னாள் தலைவர் டிடி அசோக், “தமிழக முதல்வரின் 1 டிரில்லியன் பொருளாதார கனவை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம் 2030-ம் ஆண்டிற்குள் நிறைவேற்றுவோம். இந்தியாவிலேயே தமிழ்நாடு மொத்த உற்பத்தியில் (GSDP) இரண்டாவது பெரிய மாநிலம் ஆகும். தற்போதைய தமிழ்நாட்டின் GSDP $320 பில்லியன் ஆகும். கடந்த 2 ஆண்டுகளில், தமிழ்நாட்டின் வளர்ச்சி மிகவும் முன்னேறியுள்ளது” என்று பேசினார்.

இந்த மாநாட்டில் அசோக் லேலேண்ட்டின் இயக்குனர் கோபால் மகாதேவன், ஓலா எலக்ட்ரிசிட்டி மொபிலிட்டி லிமிடெட்டின் துணை தலைவர் பிசி டட்டா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.