சென்னை: மாண்டஸ் புயலால் சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள்  வீட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கவும், தேவையின்றி சாலைகளில் வாகனங்களில் செல்வோரை கட்டுப்படுத்தவும், சென்னை காவல்துறையின் ரோந்து படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக காவல் அணையர் சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார்.

மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவில்  சென்னையை அடுத்த மாமல்லபுரம் பகுதியில் கரையை கடக்க உள்ளது. இதனால் சென்னையில் காலை முதலே பலத்த காற்றுடன் மழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பணிக்கு சென்றவர்கள் உடனே வீடு திரும்ப அறிவுறுத்தப்பட்ட நிலையில், வீட்டை விட்டு அவசர தேவையின்றி யாரும் வெளியே வர வேண்டாம் என காவல்துறையும், மாநகராட்சியும் அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், தேவையின்றி பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தடுக்கவும், சாலைகளில் வாகனங்களில் வெளியே செல்வோரை எச்சரிக்கவும், காவல்துறையின் ரோந்து படையினர் சென்னை முழுவதும் முக்கிய சாலைகளிலும், பகுதிகளிலும் ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் கூறி உள்ளார். அதன்படி, இன்று மாலை முதல் புயல் கரையை கடந்து கஎற்று மழை ஓயும் வரை,  தீவிர ரோந்துப் பணியில் காவல்துறையினர் ஈடுபடவிருக்கிறார்கள்.  எனவே, அவசியமின்றி யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ள காவல்துறை, தேவையின்றி வெளியே செல்வோர் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தி உள்ளது.