கொல்கத்தா :

மே. வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

அந்த மாநில முதல்-அமைச்சரும், திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, கடந்த மாதமே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.

ஜல்பைகுரி என்ற இடத்தில் நேற்று நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய அவர் “மத்திய படைகளை மேற்கு வங்காள மாநிலத்தில் மத்திய பா.ஜ.க. அரசு குவிப்பதன் மூலம் எங்களை பயமுறுத்த முடியாது” என்று குறிப்பிட்டார்.

“மே. வங்காளத்தை குஜராத்தாக மாற்ற பா.ஜ.க. முயற்சிக்கிறது” என்று குற்றம் சாட்டிய மம்தா, “பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் நமது மாநிலத்தை நாசமாக்க அந்த கட்சி திட்டமிடுகிறது” என்று தெரிவித்தார்.

“பா.ஜ.க.வினரும், ஆர்.எஸ்.எஸ். கட்சியினரும், உண்மையான இந்துக்கள் அல்ல. அந்த கட்சியில் விவேகானந்தரோ, ராமகிருஷ்ணரோ கிடையாது” என்று குறிப்பிட்ட மம்தா பானர்ஜி, “வெளியூர் ஆட்களின் கட்சியான பா.ஜ.க.வை சட்டப்பேரவை தேர்தலில் மே.வங்க வாக்காளர்கள் தோற்கடிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

– பா. பாரதி