மும்பை :

சுற்றுலாத்தளங்களில் குழுவாக புகைப்படம் எடுப்போர், அறிமுகம் இல்லாத மூன்றாம் நபரை அழைத்து, தங்களை போட்டோ எடுக்குமாறு கேட்டுக்கொள்வதுண்டு.

மகாராஷ்டிர மாநில அமைச்சர் ஒருவருக்கு திடீர் போட்டோகிராபரக மாறிய அனுபவம் அண்மையில் கிட்டியது.

கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கி கிடந்த அந்த மாநில அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ள மும்பை வந்துள்ளனர்.

அந்த மாநில பொதுப்பணித்துறை அமைச்சரான தத்தாத்ரேயா பார்னே என்பவர், பேரவை கூட்டத்தொடரை முடித்து விட்டு, நண்பர்களுடன் மும்பையின் “டிரைவ் இன்” பகுதியில் உலா சென்றார்.

அப்போது அங்கு நின்ற இளைஞர்கள் சிலர், பார்னே அமைச்சர் என தெரியாமல், “சார். எங்களை ஒரு போட்டோ எடுத்து தர முடியுமா?” என கேட்டு, தங்கள் காமிராவை கொடுத்துள்ளனர்.

நல்லவேளையாக காமிராவை கையாளும் யுத்தி அந்த அமைச்சருக்கு இருந்ததால், இளைஞர்களை விதம் விதமாக ‘சுட்டுத்தள்ளி’ குஷி படுத்தியுள்ளார்.

புகைப்படம் எடுத்து முடித்த பின்னர், அமைச்சர் பார்னே, தன்னை அறிமுகம் செய்து கொள்ள, இளைஞர்களுக்கு இன்ப அதிர்ச்சி. அமைச்சருடன், அமர்ந்து அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள, அதனை அவருடன் சென்ற எல்.எல்.ஏ. ஒருவர் ‘கிளிக்’ செய்துள்ளார்.

– பா. பாரதி