புதுடெல்லி :

கோத்ரா வன்முறையின் போது இந்துத்துவா ‘முகமாக’ விளஙகியவர் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கினார்.

குஜராத்தின் அகமஹாதாபாத்தில் நடைபாதையில் செருப்பு தைக்கும் கடைவைத்திருக்கும் அசோக் மோச்சி 2002ம் ஆண்டு உலகையே உலுக்கிய கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையின் போது இந்துத்துவாவின் முகமாக இவரது படம் அன்றைய நாளிதழ்கள் பலவற்றிலும் வந்ததை அடுத்து ஒரே நாளில் இந்து அமைப்புகளின் ‘போஸ்டர் பாய்’-ஆக மாறி பிரபலமானார்.

பத்திரிகைகளில் வந்த இவரது படத்தை வைத்து அப்போது இவரை கைது செய்த போலீசார், இவர் வன்முறையில் ஈடுபட்டதற்கான போதிய ஆதாரம் இல்லையென்று 14 நாட்களிலேயே இவரை விடுதலை செய்தது.

அந்த படத்தை எடுத்த மிரர் பத்திரிகை புகைப்பட கலைஞரும் தான் படமெடுக்கும் போது இவர் தலையில் காவி துணி கட்டிக்கொண்டு கையில் இரும்பு கம்பியுடன் ஒரு விளம்பர பலகையின் மீது நின்றிருந்ததை தவிர வேறு வன்முறையில் ஈடுபட்டதை பார்க்கவில்லை என்று சாட்சியளித்திருந்தார்.

இப்படி போஸ்டர் பாயாக வலம் வந்த அசோக் மோச்சி தற்போது வேளான் சட்டங்களுக்கு எதிராக,  ராஜஸ்தான் – ஹரியானா மாநிலங்களின், ஜெய்சிங்ப்பூர் – க்ஹெரா எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சிகப்பு கொடியை பிடித்து களமிறங்கியிருக்கிறார்.

முன்னணி நிறுவனங்களின் காலணிகளை விற்பனை செய்யும் ஷோரூம் வைக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு நடைபாதையில் தற்காலிக கடை நடத்தி வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவர், “2002 ம் ஆண்டு நடந்த சம்பவம் எனக்கு பல்வேறு இன்னல்களையும் படிப்பினைகளையும் தந்தது” என்று கூறுகிறார்.

நாளொன்றுக்கு 200 ரூபாய் சம்பாதித்து வந்த தனக்கு தன் மேல் போடப்பட்ட வழக்கை நடத்துவதற்காக 10,000 ரூபாய் கடனாளியானதாக வேதனையுடன் நினைவுகூருகிறார்.

2016ம் ஆண்டு முஸ்லீம்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணி ஒன்றில் கலந்துகொண்ட இவர். பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளின் கொள்கையின் மேல் தனக்கு ஏற்பட்ட வெறுப்பே இந்த மனமாற்றத்திற்கு காரணம் என்று கூறியதோடு, மதவெறிக்கு ஆளாகி வன்முறையை கையிலெடுக்க நினைப்பவர்களுக்கு தனது வாழ்க்கை ஒரு பாடமாக அமையும் என்றும் கூறினார்.