சென்னை

ந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து  செய்யப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

கடந்த மார்ச் முதல் கொரோனா அச்சுறுத்தலால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.  மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.   பள்ளிகள் திறக்கப்படாததால் தற்போது ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட போதிலும் ஒரு சில தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலமாகத் தேர்வுகள் நடந்தன.   ஆனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெறவில்லை.  வழக்கமாக டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடக்கும்.   இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் அளித்த செங்கோட்டையன், “இந்த வருடம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப் படுகிறது.  அதே வேளையில் தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வுகள் நடத்தலாம்.  மேலும் இந்த வருடம் 1 முதல் 9 ஆம் வகுப்புக்கள் வரை 50% பாடத்திட்டங்களும் 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்புக்களில் 35% பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.