மதுரை அழகர் கோயில்
அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று.
இத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்ற பெயர்களையும் கொண்டுள்ளது. கருவறையில் பெருமாள் ஸ்ரீ பரமசுவாமி எனப்படுகிறார். உற்சவ மூர்த்தி அழகர், அல்லது சுந்தரராசப் பெருமாள் எனப்படுகிறார்.
பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகளை இக்கோயில் கொண்டுள்ளது.
கோயில் கலைச் சிறப்புகள்
மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது.
ஆரியன் மண்டபத்தில் கொடுங்கைகள் மற்றும் இசைத் தூண்கள் உள்ளன. இசைத் தூணின் உச்சியிலுள்ள சிங்கத்தின் வாயில், சுழலும் நிலையில் ஆனால் வெளியே எடுக்க முடியாதபடி உள்ளது.
கல்யாண சுந்தரவல்லி தாயாரின் சன்னதி கலைநயத்துடன் உள்ளது.
திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம், இலக்குமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக் கொண்ட கற்றூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிறந்த படைப்புகளாகும்.
வசந்த மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் அழகிய ஓவியங்கள் உள்ளன.
கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பசாமி சன்னிதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது.
இராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது. சிதைந்த நிலையிலும் இக்கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டினை வெளிப்படுத்துகிறது.
கோவிலைச் சுற்றி உள்கோட்டை மற்றும் வெளிக்கோட்டை எனப்படும் இரணியன் கோட்டை , அழகாபுரிக் கோட்டை அமைந்துள்ளது.
அமைவிடம்
மதுரை நகரிலிருந்து 21 கி. மீ., தொலைவில் அழகர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
புராண அடிப்படையில் கள்ளழகர், மீனாட்சியம்மனின் உடன்பிறந்தவர். சித்திரைத் திருவிழாவின் பொழுது, கள்ளழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு மதுரை நகருக்கு வருகிறார். கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (வளரி), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர். அழகர் கள்ளர் வேடத்தில் வருவதால், அழகர் என்ற பெயர் கள்ளழகர் என மாறியது.
இதனால் கள்ளர் இனத்திற்கு தலைவராகவும் குல தெய்வமாகவும் அழகர் இருக்கிறார். வைகை ஆறு வரை வந்து பின் வண்டியூர் சென்று அழகர்மலை திரும்புகிறார். திருமலை மன்னர் காலத்திற்கு முன் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா சித்திரை மாதத்தில் முழு நிலவன்று மதுரையை அடுத்துள்ள தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில், கள்ளழகரை மதுரை வைகையாற்றில் எழுந்தருளச் செய்து, மதுரை சித்திரைத் திருவிழாவாக நடத்தியவர்.
சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் மதுரைக்கு வரும் நிகழ்வை எதிர் சேவை என்று கொண்டாடப்படுகிறது. முக்கிய விழாவாகக் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.