மதுரை: தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் வகையில், மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ள நிலையில், அதற்கான பணிகள் தொடங்கப்படாதது வேதனையை அளித்துள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் கவனத்தில்கொண்டு, விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபடும் என்று கடந்த 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வற்புறுத்தலின் போரில், தமிழ்நாட்டில் அமைக்க மத்தியஅரசு ஒப்புக்கொண்டது. இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பல இடங்கள் ஆய்வுசெய்யப்பட்ட நிலையில், இறுதியாக மதுரை தேர்வு செய்யப்பட்டது. இந்த மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்தால், தென்மாவட்ட மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, கிடப்பிடல் போடப்பட்டுள்ளது அதிர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பாணை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. அதற்காக ரூ.1,264 கோடி மதிப்பிடப்பட்டது. மேலும்,  சுமார் 201.75 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டது. இங்கு 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி அமைக்கப்படும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 45 மாதங்களில் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இயக்குனர்களும் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டனர். இதனால் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டு வரும் என நம்பப்பட்டது.

மதுரை எய்ம்ஸ் பணிகளை உடனே தொடங்குங்கள்! பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!

ஆனால் அடிக்கல் நாட்டப்பட்டு 36 மாதங்கள் (3ஆண்டுகள்) ஆகியும் முதல் கட்ட பணிகள் கூட தொடங்கவில்லை என்பது வேதனைக்குள்ளாகி உள்ளது. இதற்கிடையில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலிலும் இந்த பிரச்சினை எதிரொலித்தது. எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கல்லை வைத்துக்கொண்டு, திமுக தலைவர் மகனும் திமுக இளைஞரணி தலைவருமான  உதயநிதி ஸ்டாலின் (தற்போது சேப்பாக்கம் எம்எல்ஏ)  வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக எம்.பிக்கள் ரவிந்திரநாத், மாணிக் தாகூர் தேர்வு…

ஆனால் திட்டமிட்டபடி  காலத்தில் கட்டுமானப் பணி தொடங்காத நிலையில், 3 ஆண்டுகளாகியும் மருத்துவமனை அமைவதற்கான அடிச்சுவடு கூட தெரியவில்லை. மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் தவிர வேறு எந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படவில்லை.  இதனிடையே, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் மொத்த செலவினம் ரூ.1,264 கோடி மதிப்பு என கூறப்பட்ட நிலையில், 2020ஆம் ஆண்டு இறுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் மருத்துவமனை அமைவதற்கான பணிகள் தொடங்கபடாமலேயே இருந்து வருகிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக அறிவிக்கப்பட்ட நேரத்தில், இந்தியாவில் வேறு பல மாநிலங்களிலும் இதுபோன்ற மருத்துவமனை அமைக்கப்படுவதாக மத்தியஅரசு தெரிவித்தது. அங்கெல்லாம் குறிப்பிட்டபடி, குறிப்பிட்ட காலத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டுமே கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில்  எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட  ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் மத்திய அரசு கடன் கேட்டது. ஆனால், தற்போது வரை நிதி உதவி வராத தால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான கேள்விக்கு பாராளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த பதிலில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான கடன் திட்டத்தை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA)  அங்கீகரித்துள்ளது என்றும், அதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும் என்றும் கடந்த ஆண்டு கூறியது. ஆனால்,   36 மாதங்கள் ஆகியும் முதல் கட்ட பணிகள் கூட தொடங்கவில்லை.

தற்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும், ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசாவது, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகள் ஆகியும் மதுரை எய்ம்ஸ்-க்கான லே-அவுட் இன்னும் தயாரிக்கப்படவில்லை! ஆர்டிஐ தகவல்…