சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பூஸ்டர் டோஸ் கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை அமலுக்கு வந்துள்ள நிலையில், வழிகாட்டுதல் நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,

வேட்பாளர்கள் வீடு வீடாக பிரச்சாரம் செய்ய அதிகபட்சமாக 3 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

கூட்டமாக பிரச்சாரம் செய்யவும், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தவும் 31-ம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.

உள்ளரங்க கூட்டங்களில் 100 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.

தேர்தல் நடக்கும் மாநகராட்சிகளில் 15,158, நகராட்சிகளில் 7,417, பேரூராட்சிகளில் 8,454 என மொத்தம் 31,029 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அதிகபட்சமாக சென்னை மாநகராட்சியில் 5,794 வாக்குச் சாவடிகள் உள்ளன.

தேர்தல் பாதுகாப்புப் பணியில் 80 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் என மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரம் அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அனைத்து இடங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். அதற்காக 55,337 கட்டுப்பாட்டு கருவிகளும், 1 லட்சத்து 6 ஆயிரத்து 121 வாக்குப்பதிவு இயந்திரங்களும் முதல்நிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட உள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு மட்டும் 3 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இணை இயக்குநர், உதவி இயக்குநர், துணை ஆட்சியர் நிலையில் பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு தலா ஒருவர் வீதமும், மாநகராட்சிகளில் மண்டலத்துக்கு ஒரு அதிகாரி வீதம் வட்டார தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா, நுண் பார்வையாளர்கள், இணையதளம் வழி கண்காணிப்பு ஆகிய வழிகளில் கண்காணிக்கப்பட உள்ளன.

வாக்கு எண்ணிக்கை பிப்.22-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தேர்தல் நடவடிக்கைகள் 24-ம் தேதி முடிவடைகிறது.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் அரசுப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகளை இணைந்து மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணி களுக்காக அரசு வாகனங்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரூ.50 ஆயிரத்துக்குமேல் ரொக்கமாக கொண்டு செல்வோர் உரிய ஆவ ணங்களுடன் கொண்டு செல்ல அறி வுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காகாணிக்க மாவட்ட, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒருங்கிணைப்பு சுகாதார அதிகாரி நியமிக்கப்படுவார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வேர்பாளர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி இல்லை.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி கட்டாயம் இல்லை.

இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.