திருப்பதி

திருப்பதி கோவிலில் இலவச தரிசன டோக்கன்களை பெற மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

கடந்த மே மாதம் 5 ஆம் தேதி முதல் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாகத் திருப்பதியில் பல கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றில் ஒன்றாக சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசன டோக்கன் வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.   ஆயினும் ரூ.300 சிறப்புத் தரிசன ஆனலைன் டிக்கட் மற்றும் பிரமுகர்கள் தரிசனம் உள்ளிட்டவை தொடர்ந்தன.

சாமானிய பக்தர்கள் இலவசமாகத் தரிசனம் செய்வது அடியோடு நின்று போனதால் பலருக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது.   இதையொட்டி சித்தூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டும் சோதனை முறையில் இலவச தரிசனத்தைத் தேவஸ்தானம் அமல்படுத்தியது.  இது பக்தர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.   எனவே நேற்று முதல் தினமும் 8000 இலவச தரிசன டோக்கன் வழங்க ஆரம்பிக்கப்பட்டது.

இது பக்தர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  தற்போது புரட்டாசி மாதம் என்பதால் ஏராளமானோர் திருப்பதிக்கு வருகின்றனர்.  இவர்களுக்கு திருப்பதி பேருந்து நிலையம் எதிரில் உள்ள தங்கும் விடுதியில் ஆதார் அட்டை ஸ்கேன் செய்து டோக்கன்கள் அளிக்கப்படுகின்றன.    தினசரி 8000 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால் இரவு முதலே பக்தர்கள் இங்கு குவிந்து வருகின்றனர்.