தேர்தலில் சீட் தருவதாக கூறி ரூ.5 கோடி மோசடி! ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது வழக்கு….

Must read

பாட்னா: தேர்தலில் சீட் தருவதாக கூறி ரூ.5 கோடி மோசடி செய்ததாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த பாட்னா நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது, பீகார் மாநிலத்தில், லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம் காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் போட்டியிட்டது. இதில், பலர் கட்சி சார்பில் போட்டியிட  கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவிடம் பணம் கொடுத்ததாகவும், ஆனால் அவர் சீட் ஒதுக்கவில்லை என்றும் புகார் எழுந்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஞ்சீவ்குமார் சிங் என்பவர் பாட்னா தலைமை ஜுடிசியல் கோர்ட்டில் தேஜஸ்வி யாதவ் மீது வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில்,   காங்கிரசை சேர்ந்த தான், கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்பியதாகவும், பாகல்பூர் தொகுதியில் இருந்து ஆர்ஜேடி டிக்கெட் தருவதாக வாக்குறுதி அளித்து, அங்கு  ‘சீட்’ பெற்றுத் தருவதாக கூறி ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்பட சிலர்  ரூ.5 கோடி பெற்றார்.  இருப்பினும், அவர்கள் எனக்கு டிக்கெட் கொடுக்கவில்லை, அதற்கு பதிலாக 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் எனக்கு ஒரு வாக்குறுதியைக் கொடுப்பதாக உறுதியளித்தனர், அதுவும் எனக்கு வழங்கப்படவில்லை. நான் அவர்களை எதிர்கொண்டபோது, என்னை கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள்.

மேலும் மனுவுடன், தேஜஸ்வி யாதவுடன், அவரது சகோதரியும், எம்.பி.யுமான மிசா பாரதி, பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் மதன்மோகன் ஜா, மறைந்த முன்னாள் தலைவர் சதானந்த் சிங், அவரது மகன் சுபானந்த் முகேஷ், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் ரத்தோர் ஆகியோரது பெயர்களையும் சஞ்சீவ்குமார் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  சஞ்சீவ்குமாரின் புகாரின் அடிப்படையில் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு பாட்னா எஸ்.பி.க்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் பீகாரில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article