சென்னை: உச்சநீதிமன்றம் விடுத்துள்ள கெடுவுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கடந்த அதிமுக அரசு தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வந்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக, உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கையின்படி, கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் முதல்கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் நடைபெற்றது. மேலும் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் இன்னும் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக தேர்தலை நடத்துவதில் சிக்கல் எழுந்தது.
இதையடுத்து கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், செப்டம்பருக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட்டது.
இந்த நிலையில், விடுபட்ட மாவட்டம் உள்பட, மீதமுள்ள உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் மாதத்துக்குள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக நடத்துவது குறித்து அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.
இன்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா கட்டுப்பாடுகளுடன் உள்ளாட்சித் தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.