இஸ்ரேலுடன் கைகோர்த்துள்ள அமெரிக்கா ஈரான் மீது போர் தொடங்கிய நிலையில் இந்தப் போர் மேலும் சில வாரம் நீடிக்கக்கூடும் என்று கூறியுள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் முக்கிய கடற்படை தளமான United States Fifth Fleet தற்போது பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈரான் இந்த கடற்படை தளத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தி வருவது சாதாரண ராணுவ நடவடிக்கையாக மட்டும் அல்ல; அது அமெரிக்காவின் பிராந்திய ஆதிக்கத்துக்கு விடப்பட்ட ஒரு பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது.

பஹ்ரைன் நாட்டில் அமைந்துள்ள இந்த கடற்படை பாரசீக வளைகுடா, செங்கடல், ஓமன் வளைகுடா, அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகள் என சுமார் 6.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பை கண்காணிக்கிறது. மொத்தம் 21 நாடுகளை உள்ளடக்கும் இந்த பகுதி உலகின் முக்கிய கடல் வழித்தடங்களை கட்டுப்படுத்தும் இடமாக கருதப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை, சுயஸ் கால்வாய், பாப் எல்-மந்தெப் நீரிணை என மூன்று மிக முக்கிய நீரிணை இந்த பகுதியில் உள்ளது.
உலகளவில் நடைபெறும் எண்ணெய் வர்த்தகத்தின் சுமார் 90% இந்த கடல் வழித்தடங்கள் வழியாகவே செல்கிறது. அதனால் இந்த பகுதிகளை அமெரிக்கா பாதுகாப்பில் வைத்திருப்பது அதன் எரிசக்தி மற்றும் உலக வர்த்தக பாதைகளை கட்டுப்படுத்த உதவுகிறது.

அமெரிக்க ஆதிக்கத்தின் முக்கிய தளமாக உள்ள இந்த கடற்படை அமைப்பு 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இது செயல்படத் தொடங்கியது.
பின்னர் பல முக்கிய போர்களிலும் இது பங்கேற்றதாக கூறப்படுகிறது.
2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் போர், 2003ஆம் ஆண்டு ஈராக் போர் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இந்த கடற்படை முக்கிய பங்கு வகித்தது.
தற்போது, இந்த கடற்படையில் 30-க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், நாசகார கப்பல்கள், விமானம்தாங்கிக் கப்பல்கள், 15000 ராணுவத்தினர், நூற்றுக்கணக்கான போர் விமானங்கள், ஆயிரக்கணக்கான நவீன ஏவுகணைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏன் இந்த தளம் இலக்கு?
இந்த கடற்படை மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள், உளவுத்துறை தகவல்கள், கடல் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கிய கட்டுப்பாட்டு மையமாக செயல்படுகிறது. எனவே இதை பலவீனப்படுத்துவது அமெரிக்காவின் பிராந்திய சக்தியை நேரடியாக பாதிக்கும் என மதிப்பிடப்படுகிறது.
சில தகவல்களின் படி, ஈரான் இந்த தளத்தின் ரேடார் அமைப்புகள் மற்றும் சில கடற்படை வசதிகளை தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெறுகின்றன என்றும் கூறப்படுகிறது. இதனால் அந்த கடற்படை பாதுகாப்பு அமைப்பில் பலவீனம் ஏற்பட்டிருக்கலாம் என்ற மதிப்பீடுகளும் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சில போர் விமானங்கள் விழுந்த சம்பவம் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. இது தவறுதலா அல்லது தாக்குதலா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை. இந்த விவகாரம் குறித்து அமெரிக்க மத்திய ராணுவ கட்டளை மையம் (சென்ட்காம் – CENTCOM) வெளியிட்ட தகவல்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவுக்கு விடப்பட்ட பெரிய சவாலா?
இந்த கடற்படை முழுமையாக பாதிக்கப்படுமானால், அது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பாதுகாப்பு, தாக்குதல் திறன் மற்றும் உளவு சேகரிப்பு திறனுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். மேலும் அது Israel உள்ளிட்ட அமெரிக்க கூட்டாளிகளின் பாதுகாப்பிலும் தாக்கம் ஏற்படுத்தக்கூடும் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனால், இந்த விவகாரம் தற்போது ஒரு சாதாரண ராணுவ மோதல் என்பதை விட அமெரிக்காவின் உலகளாவிய ஆளுமைக்கு விடப்பட்ட சவால் என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது.