சென்னை: ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.

ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, தனது வருமானத்தை மறைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில், மனுதாரர் இந்த வழக்கைத் தொடர வேண்டிய அவசியமே இல்லை. எங்களிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில், வருமானத்தை மறைத்தது தொடர்பாக நவாஸ் கனிக்கு எதிராக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.
கடந்த 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களின்போது திமுக கூட்டணி ஆதரவாருடன் வெற்றிபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினரான நவாஸ் கனி தாக்கல் செய்த வேட்புமனுக்களில் உள்ள சொத்து விவரங்களில் பெரும் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி, திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவில், ”2019-க்கும் 2024-க்கும் இடைப்பட்ட காலத்தில் நவாஸ் கனி சுமார் 23 கோடியே 58 லட்சம் ரூபாய் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார். ஆனால், அவர் தேர்தல் ஆணையத்திடம் உண்மையான சொத்து விவரங்களை கொடுக்கவில்லை. அவர் தனது வருமானத்தை மறைத்துள்ளார். எனவே, இது குறித்து வருமான வரித்துறை மற்றும் சிபிஐ (CBI) விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்தமனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “மனுதாரர் இந்த வழக்கைத் தொடர வேண்டிய அவசியம் இல்லை. எங்களிடம் ஏற்கனவே உள்ள ஆதாரங்களின் அடிப்படையில், வருமானத்தை மறைத்தது தொடர்பாக நவாஸ் கனிக்கு எதிராகச் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று உறுதியளித்தார்.
மேலும், நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருப்பது, வருமான வரித்துறை மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் தடையாக இருக்காது என்றும் நீதிபதிகள் இதன்போது தெளிவுபடுத்தினர்.
இதையடுத்து, சொத்துக் குவிப்பு புகார் குறித்து சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சில விளக்கங்களை அளித்தார். அப்போது, நவாஸ் கனி தனது பழைய சொத்துக்களை விற்றுவிட்டு, புதிய சொத்துக்களை வாங்கியுள்ளார். மனுதாரர் குறிப்பிட்டது போல 288% சொத்துக்கள் அதிகரிக்கவில்லை, அது வெறும் 2.87% மட்டுமே அதிகரித்துள்ளது.
எனவே, சிபிஐ விசாரணை நடத்தக் கோரும் மனுதாரரின் புகாரில் போதிய முகாந்தரம் இல்லை என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்தப் புகார் குறித்து நவாஸ் கனி தரப்பு தனது விளக்கத்தை அளிக்க உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
வருமான வரித்துறை “சட்டப்படி நடவடிக்கை உறுதி” என்று கூறியுள்ளதால், நவாஸ் கனிக்கு சட்டச் சிக்கல்கள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.