கமதாபாத்

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் குஜராத் முதல்வருமான சங்கர்சிங் வாகேலா புல்வாமா தாக்குதல் பாஜகவின் சதித்திட்டம் என கூறி உள்ளார்.

குஜராத் மாநில முன்னாள் முத்லவரான சங்கர்சிங் வாகேலா காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் ஆவார். அவர் குஜராத் மாநில சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். தற்போது அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உள்ளார். நேற்று சங்கர்சிங் வாகேலா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது சங்கர்சிங் வாகேலா, “பாஜக தொடர்ந்து தீவிரவாத தாக்குதலை திட்டமிட்டு நடத்தி வருகிறது. சமீபத்திய புல்வாமா தாக்குதலும் முந்தைய கோத்ரா தாக்குதலைப் போல் பாஜகவின் சதி திட்டத்தால் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு வெடிகுண்டுகள் எடுத்து வர பயன்படுத்திய வாகனத்தின் பதிவு எண் ஜிஜே என குஜராத் மாநில எண்ணாக இருந்துள்ளது. .

பாஜக அரசு தனது தேர்தல் வெற்றிக்காக தீவிரவாத தாக்குதல்களை பயன்படுத்தி வருகிறது. கடந்த 5ஆண்டுகளாக இது போல பல தாக்குதல்கள் நடந்துள்ளன. பாலகோட் விமானப்படை தாக்குதலில் எந்த ஒரு தீவிரவாதியும் கொல்லப்படவில்லை. இதில் 200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக எந்த ஒரு சர்வதேச அமைப்பும் ஒப்புக் கொள்ளவில்லை. பாலகோட் தாக்குதல் என்பதே ஒரு திட்டமிட்ட சதி ஆகும்.

புல்வாமா தாக்குதல் குறித்த எச்சரிக்கை தகவல்கள் வந்தும் எவ்வித முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்கள் இருந்ததாக தெரிந்தும் ஏன் அவற்றை அழிக்க முடிவு எடுக்கவில்லை? புல்வாமா தாக்குதலுக்காக பாஜக காத்திருந்ததா?” என கேள்விகள் எழுப்பினார்.