டில்லி

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் பிர்ஜு சைலா விமான கடத்தல் குறித்து பொய் தகவல் அளித்ததற்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5 கோடி அபராதம் விதிக்கபட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி அன்று ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானம் மும்பையில் இருந்து டில்லிக்கு சென்றுக் கொண்டு இருந்தது. இதில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் பிர்ஜு சைலா என்பவர் பயணம் செய்துக் கொண்டிருந்தார். அவர் கழிவறையில் சென்று அங்கிருந்த கை துடைக்கும் காகிதத்தில் விமானக் கடத்தல் குறித்து தகவல் எழுதினார்.

ஆங்கிலத்திலும் உருதுவிலும் அவர்,”விமானத்துக்குள் கடத்தல்காரர்கள் ஊடுருவி உள்ளனர். அத்துடன் பயங்கரமான வெடிகுண்டுகள் அவர்களிடம் உள்ளன’ என எழுதி வைத்து விட்டு வெளியே வந்து பயணத்தை தொடர்ந்துள்ளார். விமானப் பணிப்பெண் இந்த செய்தியைக் கண்டு உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். அதை ஒட்டி விமானம் பாதி வழியில் அகமதாபாத் விமான நிலையத்தில் இறக்கப்பட்டது.

அகமதாபாத் விமான நிலையத்தி சைலாவை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போது அவர் தாம் இந்த குறிப்பை எழுதி வைத்ததை ஒப்புக் கொண்டார். அகமதாபாத் குற்றவியல் பிரிவில் நடந்த விசாரணை அதன் பிறகு தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. சைலாவிடம் மேலும் விசாரணை நடந்தது. முதலில் ஜெட் ஏர்வேஸ் விமானம் அளித்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததால் அவர் இவ்வாறு செய்ததாக கூறினார்.

அதை நம்பாத தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசரணையை தொடர்ந்தனர். அதன் பிறகு அவர் தனது காதலி அவரை விட்டு பிரிந்து டில்லி ஜெட் ஏர்வேஸ் அலுவலகத்தில் பணி புரிவதால் அந்த அலுவலகத்தை மூடச் செய்ய இவ்வாறு தகவல் அளித்ததாக ஒப்புக் கொண்டார். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியாகி உள்ளது.

அந்த தீர்ப்பில், “பிர்ஜு சைலா வேண்டுமென்றே ஓடும் விமானத்தில் பீதியை கிளப்பி உள்ளார். இதனால் விமான சேவை தடைபட்டு பயணிகள் துயருற்றுள்ளனர். அதனால் அவர் ரூ.5 கோடி அபராதம் செலுத்த வேண்டும். அந்த தொகை பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கு பிரித்து அளிக்கப்படும். அத்துடன் பலருக்கு உயிர் அபாயத்தை தூண்டிய இவர் செய்கைக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது ” என தெரிவிக்கப்பட்டுள்ள்து.