பெங்களூரு

தலைமறைவாக உள்ள பெங்களூரு ஐ எம் ஏ நிறுவன அதிபர் முகமது மன்சூர் கான் இரு ஆடியோக்கள் வெளியிட்டுள்ளார்.

பெங்களூரு நகரில் சிவாஜி நகர் பகுதியில் ஐ எம் ஏ கோல்ட் என்னும் நிதி நிறுவனம் மற்றும் தங்க நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் முகமது மன்சூர் கான் என்பவர் ஆவார். இவர் குறுகிய காலத்தில் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி உள்ளார். இவ்வாறு ரூ. 400 கோடி வரை அவர் வசூல் செய்து அந்த பணத்துடன் தலைமறைவாகி விட்டார்.

இந்த நிதி நிறுவனத்தில் பலரும் தங்கள் கடின உழைப்பால் சேமித்த பணத்தை முதலீடு செய்துள்ளனர். நிறுவன அதிபர் தலைமறைவானது அவர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. இதில் ஷமீன் சையத் என்னும் 77வயது மூதாட்டி வீடு வாசல் அற்றவர் ஆவார். இவர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் தனது பிச்சை பணத்தில் மிச்சம் பிடித்து ரூ.1 லட்சம் முதலீடு செய்துள்ளார்.

இந்த முதலீட்டாளர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் வரை மாதாந்திர வட்டி அளிக்கப்பட்டு வந்துள்ளது. அதன் பிறகு வட்டி வரவில்லை. அத்துடன் அதிபரும் தலைமறைவானதால் மக்கள் கொதிப்படைந்து அந்த நிறுவனத்தை முற்றுகை இட்டுள்ளனர். சாலை நெரிசல் அளவுக்கு அதிகமானதால் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்தது.

பெங்களூரு காவல்துறை துணை ஆணையர் ராகுல்குமார் விரைந்து வந்து மக்களை சமாதானம் செய்தார். நிறுவன அதிபர் முகமது மன்சூர் கான் மீது வழக்கு பதிந்து அவரை தேடும் முயற்சி நடைபெறுகிறது. இந்நிலையில் அவர் அரபு நாட்டுக்கு ஓடி விட்டதாக வந்த தகவலை காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

முகமது மன்சூர் கான் வெளியிட்ட ஒரு ஆடியோவில் தாம் கர்நாடக மாநில அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஏராளமான லஞ்சம் கொடுத்து ஏழையாகி விடதாகவும் அதனால் தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் அந்த ஆடியோவில் சிவாஜி நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ரோஷன் பைக் என்பவர் தம்மிடம் இருந்து வாங்கிய ரூ.400 கோடியை திருப்பி தரவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

நேற்று முகமது மன்சூர் கான் பேசிய இரண்டாம் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர், “நான் பெங்களூருவில் உயிருடன் இருக்கிறேன். நான் தற்கொலை செய்துக் கொண்டதாகவும் எனது குடும்பத்தினர் ஊரை விட்டு ஓடி விட்டதாகவும் வந்த செய்திகள் தவறானவை. நான் உங்கள் பணத்தை சொத்துக்கள், தங்கம், வைரம் போன்றவைகளில் முதலீடு செய்துள்ளேன்.

அனைவருக்கும் அவரவர் தொகை நிச்சயம் திரும்ப கிடைக்கும். என்னை அழிக்க பல பெரிய மனிதர்கள் முயல்கின்றனர். அவர்கள் சட்டப்பேரவை உறுப்பினரான ரோஷன் பைக், சகீல் அகமது மற்றும் ராகில் ஆகியோர் ஆவார்கள். உங்கள் பணம் 15 ஆம் தேதி அன்று திரும்ப கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.

இந்த ஆடியோ ஒரு வீட்டுக்குள் ஒலிப்பதிவு செய்துள்ளது போல் உள்ளது. பெண்கள் பேசும் ஒலி மற்றும் கட்டுமான வேலைகள் ஒலி ஆகியவை பின்னணியில் ஒலிக்கிறது. அத்துடன் முகமது மன்சூர் கான் இந்த ஆடியோவில் 15 ஆம் தேதி என மட்டும் குறிப்பிட்டுள்ளார். எந்த மாதம் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.