சென்னை: உலக தாய்மொழி தினத்தையட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் நம் தாய்மொழியாம் தமிழைக் காப்போம் என தெரிவித்து உள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக கடைப்பிடிக்கிறது. தாய் மொழிக்காக போராடி உயிரிழந்தவர்கள், அதற்கான இயக்கத்தை நினைவுகூறி, அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பிப்ரவரி 21ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோ 1999ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு இன்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் – உயிர், உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம்

தொன்மையும் காலத்துக் கேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும் ஒருங்கே பெற்ற நம் தாய் மொழியாம் தமிழைக் காப்போம்! தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.