அஜித்தின் ‘உல்லாசம்’ படத்தை இயக்கிய ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி லெஜெண்ட்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியாகிறது.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரத்தேலா கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ‘வாடி வாசல்’ என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் மே 29 ம் தேதி மாலை 6 மணிக்கு ‘தி லெஜெண்ட்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

இந்த விழாவில் தென்னிந்திய முன்னணி நாயகிகள் ஊர்வசி ரத்தேலா, பூஜா ஹெக்டே. தமன்னா, ஹன்சிகா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், லட்சுமி ராய், டிம்பிள் ஹயாத்தி, ஸ்ரீலீலா, நுபுர் சானொன் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர்கள் பிரபு, விவேக், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படம் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ள இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.