சென்னை: தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. எந்தவொரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதால், சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துளளது.
இதைத்தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தொங்கு சட்டமன்றம் உருவாகி உள்ளது. தற்போதைய நிலையில், 107 இடங்களை கைப்பற்றி உள்ள த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. பெரும்பான்மைக்கான விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என ஆளுநர் கூறி உள்ளார்.
இதன் காரணமாக, விஜய் இன்று முதல்வராகப் பொறுப்பேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தவெகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.‘ ஆளுநரின் அறிவிப்புக்கு தவெகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
இதற்கிடையில், பா.ம.க., கம்யூனிஸ்டுகள் மற்றும் வி.சி.க. ஆகிய கட்சிகளின் ஆதரவை எளிதாகப் பெற்றுவிடலாம் என்று த.வெ.க. கணக்கிட்டிருந்தது. ஆனால், அக்கட்சிகள் உறுதியான தகவலை தெரிவிக்காத நிலையில், அதிமுகவிடம் ஆதரவு கோருவது குறித்து, இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தை அக்கட்சி தலைவர் விஜய் கூட்டி உள்ளார். இதில் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், தவெக தலைவர் விஜய்மீது வழக்கு தொடரவும் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதுவும் தவெக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற அரசியல் அரசியல் காரணமாக, தமிழ்நாட்டில்,சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் முக்கியமான இடங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு தமிழகக் காவல்துறைக்கு உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]