சென்னை: தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்திக்க மீண்டும் நேரம் கேட்டுள்ளார் .  அப்போது பெரும்பான்மை பட்டியலை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டமன்றம் உருவாகி உள்ளது. இதனால்,108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெக ஆட்சி அமைக்க முன்வந்துள்ளது.

இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் . தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து,  ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது அவர், த.வெ.க.வின் 108 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரசைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்கினார்.

இந்த பட்டியலை பெற்றுக்கொண்ட ஆளுநர், பெரும்பான்மைக்கான  118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால் தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனால் விஜய் இன்று முதலமைச்சராக பொறுப்பேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில் இன்று தவெக எம்எல் ஏக்கள் கூட்டம் பனையூர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பெரும்பான்மை குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஆளுநர் அர்லேக்கரை சந்திக்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீண்டும் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஆளுநர் நேரம் ஒதுக்கினால் விஜய் மீண்டும் ஆளுநரை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி,  ஒரு கட்சி தனினிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தேர்தல் முடிவில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தரப்பை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பதே மரபு என அரசியல் விமர்சர்கள் கூறி வருகின்றன.

ஒரு அரசு தங்களுக்கான பெரும்பான்மை இருக்கிறதா? இல்லையா? என்பதை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும். ஆனால், பொறுப்பு ஆளுநர் அர்லேகர், தன்னிடம் தனிப்பெரும்பான்மையை நிரூபித்தால் தான் ஆட்சி அமைக்கவே அழைப்பு விடுப்பேன் என  கூறியிருப்பது, அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றும்,  தவெக காங்கிரசுடன் கூட்டணி வைத்ததே இதற்கு காரணம் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

[youtube-feed feed=1]