கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை இன்று (மே 7ந்தேதி) தொடங்கி உள்ளது. இதற்கான கடைசி நாள் ஜூன் 8ந்தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைப் பிரிவுகளில் சேருவதற்கான இளங்கலை மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த மாணவர் சேர்க்கையில்,  முன்னாள் ராணுவத்தினர்,  விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீடு, மூன்றாம் பாலினத்தவர் மற்றும் அயலக வாழ் தமிழர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக,  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைப் பாடப்பிரிவு களுக்கு மாணவர்கள் (tnau.ucanapply) ஒரே இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வரும் ஜூன் 8-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இளமறிவியல் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை ஆகிய பாடப்பிரிவுகளை மாணவர்கள் தமிழ் வழியிலும் பயில வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, வனவியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து, பட்டு வளர்ப்பு, வேளாண் வணிக மேலாண்மை உள்ளிட்ட இளமறிவியல் பாடங்களுக்கும், வேளாண் பொறியியல், உணவுத் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம் போன்ற தொழில்நுட்பப் பாடப்பிரிவுகள் என மொத்தம் 14 வகையான இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கு இந்த ஒற்றைச் சாளர விண்ணப்ப முறையே போதுமானது.

வரும் கல்வியாண்டில் (2026-27), அரசு உறுப்புக் கல்லூரிகளில் 2,516 இடங்களும், தனியார் இணைப்பு கல்லூரிகளில் 4,736 இடங்களும் உள்ளன. இதில் 3,051 இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழும், 1,685 இடங்கள் மேலாண்மை ஒதுக்கீட்டின் கீழும் நிரப்பப்படவுள்ளன.

வழக்கமான இட ஒதுக்கீட்டுடன், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு, சிறந்த விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் அயலக வாழ் தமிழர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடுகளும் இந்த சேர்க்கையில் கடைபிடிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப்பிரிவு, பி.சி., எம்.பி.சி. மாணவர்களுக்கு: ரூ.600

எஸ்.சி., எஸ்.சி.ஏ. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு: ரூ.300

மாணவர் சேர்க்கை குறித்த கூடுதல் விவரங்கள், கலந்தாய்வு தேதிகள் மற்றும் வழிமுறைகள் அவ்வப்போது இணையதளத்தில் பதிவேற்றப்படும். சந்தேகங்கள் இருப்பின் மாணவர்கள் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோவை): 94886 35077, 94864 25076 (மின்னஞ்சல்: ugadmissions@tnau.in)

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்: 98657 03537, 94420 29913 (மின்னஞ்சல்: agridean2015@gmail.com)

மாணவர்கள் வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த எண்களைத் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]