சென்னை: தமிழகத்திலேயே சேலத்தில்தான் அதிக அளவிலான கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுவரை  42.47 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் விழிப்புணர்வை சிடியை  வெளியிட்ட தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  ஏப்ரல் 6-ம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 4-ம் தேதியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. வழக்கமாக 5 மணியுடன் பிரசாரம் முடிவடையும் நிலையில், இந்த முறை  இரவு 7மணி வரை வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறியவர், மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள கட்டுப்பாடு அறையில் வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கப்பட்டு வேட்பாளர்கள்  பெயர்களுடன் தயார் செய்யும் பணிகள் இன்று முழுமையாக நிறைவடையும் என்றார்.

திருச்சியில் காவலர்களுக்கு பண விநியோகம் செய்த விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும, இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள தரவுகளை வழங்கி உள்ளதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தான் எடுக்கும்.

கொரோனா பாதித்தவர்கள் , கொரோனா பாதித்ததற்கான சான்றிதழோடு வந்து வாக்களிக்கலாம் என்றும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்களின் சொந்த வாகனங்களில் பாதுகாப்பாக வந்து வாக்களிக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடைசி நேர பண பரிமாற்றத்தை கண்காணிக்க கூடுதல் கண்காணிப்பு குழு பணியமர்த்தப்படுவதோடு, மத்திய ராணுவபடையும் களத்தில் இருப்பார்கள் எனவும், 6817 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்குக்கு பணம் கொடுத்ததாக இதுவரை  133 புகார்கள் வந்துள்ளதாகவும், அதில் ஆதாரத்தோடு இருந்த 57 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக சேலம் மாவட்டத்தில் இதுவரை ரூ.  42.47 கோடியும், சென்னையில் 36.73கோடியும், திருப்பூரில் 14.02 கோடியும், நெல்லையில் 13.39 கோடியும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், வருமான வரித்துறை சார்பில் 66 கோடியே 47 லட்சம் ரூபாய் கைபற்றப்பட்டுள்ளது.

கடந்த தேர்தல்களை பொருந்தவரை, பணம், பரிசுபொருட்கள என ஒட்டுமொத்தமாக 2014 ல் 76.89 கோடியும், 2016 ல் 139.40 கோடியும், 2019 ல் 952.01 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளாது.

இவ்வாறு அவர் கூறினார்.