திருச்சி: திருச்சி காவல்நிலையங்களில் தபால் வாக்கிற்கு திமுக வேட்பாளர் கே.என்.நேரு பெயரில் கொடுக்கப்பட்ட  பணம் பறிமுதல் தொடர்பான புகாரை, சிபிஐ விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக, கட்சியின் முதன்மை செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு போட்டியிடுகிறார்.  அவரது சார்பில், திருச்சி எல்லைக்குட்பட்ட  தில்லை நகர், உறையூர், அரசு மருத்துவமனை, நீதிமன்றம், எடமலைப் பட்டி புதூர் மற்றும் கண்டோன்மெண்ட் ஆகிய 6 காவல்நிலையங்களில், காவல்துறையினர் திமுகவுக்கு வாக்களிக்கும் வகையில் ரூ.2000 நோட்டுக்களுடன் கூடிய கவர் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிரடி சோதனை மேற்கொண்ட தேர்தல் பறக்கும் படையினர்ல காவல்நிலையத்தில்  கவர் கவராக பணத்தை பறிமுதல் செய்தனர்.  தில்லை நகர் காவல்நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 100 கவர்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை கடந்த 27ந்தேதி நடைபெற்றது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து,  தில்லை நகர் காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் சுகந்தி உள்ளிட்ட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் 8 காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதனை தேர்தல் அல்லாத பணிக்கும், பொன்மலை சரக சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் தமிழ்மாறனை பணியிடை நீக்கம் செய்தும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து திமுக வழக்கறிஞர்கள் பலர்மீது காவல்துறை சிபிசிஐடி பிரிவு  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில்,  தற்போது இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடுமாறு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.