சென்னை

மிழகத்தின் கோவளம் கடற்கரை மற்றும் புதுச்சேரி ஈடன் கடற்கரைகளுக்கு உலகப் புகழ் பெற்ற புளு ஃப்ளாக் (நீலக் கொடி) விருது வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் எழில் மிக்க, கடல் சார் சூழலைப் பேணிக்காக்கும் அழகிய சிறந்த கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படுகிறது.  இந்த சான்றிதழ் டென்மார்க் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அழகான கடற்கரை மற்றும் கடல்சார் சூழலைப் பாதுகாப்பதில் இந்தியாவின் உறுதிக்கான மற்றொரு அங்கீகாரமாகத் தமிழ்நாட்டில் உள்ள கோவளம், புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்குச் சர்வதேசப் புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றுத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தமது டிவிட்டர் பக்கத்தில், ”தற்போது கோவளம் மற்றும் ஈடன் கடற்கரைகள் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலமும், 2020-இல் அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளின் மறு சான்றினாலும் இந்தியாவில் 10 சர்வதேச நீலக்கொடி கடற்கரைகள் உள்ளன என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்து உள்ளார்.

அவர் மேலும் ‘இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவுக்கான பயணத்தில் இன்னுமொரு மைல் கல்லாக அமைந்துள்ளது” எனவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே சிவராஜ்பூர்- குஜராத், கோக்லா- டையூ, காசர்கோடு மற்றும் படுபித்ரி- கர்நாடகா, கப்பாட்- கேரளா ருஷிகொண்டா- ஆந்திரா, கோல்டன்- ஒடிசா மற்றும் ராதாநகர்- அந்தமான் மற்றும் நிக்கோபார், ஆகிய எட்டு இந்தியக் கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழை டென்மார்க்கில் உள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை உறுதி செய்துள்ளது.