கொல்லம்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட ஆட்சியர் அப்துல் நாசர் சிறு வயதில் உணவுக்கு வழியின்றி ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்தவர் ஆவார்/

கேரளாவை சேர்ந்த அப்துல் நாசர் தனது ஐந்தாம் வயதில் தந்தையை இழந்தார். அவரதுஇளம் விதவைத் தாய் மஞ்சும்மா தனது ஆறு குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடினார். மஞ்சும்மா வீட்டு வேலைகளை செய்து தனது குழந்தைகளை காப்பாற்றினார். அவர் தனது குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிக்க மேலும் நான்கைந்து இடங்களில் பணியாற்ற தொடங்கினார். இதனால் அவர் உடல் சீர் கெட்டது.

மஞ்சும்மா குழந்தைகளை பிரிய விரும்பாத போதிலும் அருகில் உள்ளோர் அவர் மகன் நாசரை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து விடுமாறு அறிவுரை கூறினர்கள். வேறு வழியின்றி அவர் தலச்சேரியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து தொடங்கிய அவர் வாழ்க்கைப்பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அவர் அடிக்கடி இல்லத்தில் இருந்து வெளியேறி திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு நகரங்களில் பல வித பணிகள் செய்வார்.

நாசர் அங்குள்ள உணவு விடுதி, கடைகள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணி புரிந்து வந்தார். அவருக்கு 16 வயதாகும் போது ஒரு செய்தித்தாள் கடையில் காசாளராக பகுதி நேர பணி புரிந்தார். அதை தவிர பேப்பர் போடுவது, டியூஷன் ஆசிரியர் உள்ளிட பல வேலைகளை செய்துள்ளார். அவர் பத்தாம் வகுப்பு முடித்த பிறகுமேல் படிப்புக்காக திருச்சூர் ஆதரவற்றோர் இல்லத்துக்கு மாறினார். அதன் பிறகு 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு பெங்களூருவில் சிறு சிறு பணிகள் புரிந்தார்.

அதில் கிடைத்த பணத்தில் கல்லூரியில் சேர்ந்த அப்துல் நாசர் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அத்துடன் பி எட் முடித்து ஒரு பள்ளியில் பணி புரிந்தபடி தனது வாழ்க்கை கனவை நிஜமாக்க தொடங்கினார். 1983 ஆம் வருடம் கேரளாவில் இருந்து தேர்வு செய்யபட்டு தற்போது நிதி அயோக் தலைமை அதிகாரியாக இருக்கும் அமிதாப் காந்த் ஒரு முறை ஆதரவறோர் இல்லத்துக்கு வந்து உரையாற்றி உள்ளார்.

அவரது உரையால் கவரப்பட்டு தாமும் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாக விரும்பிய அப்துல் நாசர் அதற்கான பணிகளை தொடங்கினார். அப்போது அவருக்கு திருமணம் ஆகி விட்டது. அவர் மனைவு ருக்சானா இவருகு மிகவும் உதவி செய்துள்ளார். அவர் சென்னை, டில்லி அலிகார் போன்ற பல இடங்களுக்கு சென்று பயிற்சி பெற்று கேரள மாநில சிவில் சர்வீஸ் தேர்வுகளை முடித்தார். கடந்த 2004 ஆம் வருடம் அவர் ஐ ஏ எஸ் தேர்வுகளை எழுதி தேர்வு பெற்றார்.

ஆனால் நாசர் நல்ல நிலைமைக்கு வரும் முன்பு நோய் வாய்ப்பட்டு சுயநினைவை இழந்த இவர் தாய் மஞ்சும்மா இது பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்து நினைவு திரும்பாமலே மரணத்தை தழுவினார். தற்போது கொல்லம் ஆட்சியராக உள்ள அப்துல் நாசர் தனது வாழ்க்கைக் கதையை தெரிவித்து முயற்சி இருந்தால் யாரும் முன்னேற முடியும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.