ரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை நடத்துவதை தடுக்க திராவிடர் விடுதலைக் கழக தொண்டர்களை அதன் தலைவர் கொளத்தூர் மணி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

நவராத்திரி விழாவின், ஒன்பதாம் நாள் விழா, ஆயுத பூஜையாகவும், சரஸ்வதி பூஜையாகவும் இந்து மதத்தினரால் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், தங்களது தொழிற் கருவிகளுக்கு மரியாதை செய்யும் விதமாக பூஜை செய்வர்.  அரசு அலுவலகங்களிலும் அன்று ஆயுதபூஜை பரவலாக கொண்டாடப்படுகிறது. இதற்கென்று அரசு நிதி ஒதுக்குவதில்லை. ஊழியர்களே செலவிட்டு இவ்விழாவை அரசு அலவலகங்களில் கொண்டாடுகிறார்கள். ஆயுதபூஜை அன்று அரசு விடுமுறை என்பதால் முந்தைய நாள் கொண்டாடுவர்.

வரும் 29ம் தேதி வெள்ளிக்கிழமை ஆயுதபூஜை. அதற்கு முந்திய நாளே கொண்டாட பெரும்பாலான அரசு அலுவலகங்ளில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை கொண்டாடுவதை தடுக்க வேண்டும் என தனது கட்சியினருக்கு திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு அலுவலகங்களில் எந்தவொரு குறிப்பிட்ட மதம் தொடர்பான கடவுளர் படங்களும் இடம் பெறக் கூடாது என்றும், எந்தவொரு குறிப்பிட்ட மதம் தொடர்பான விழாக்களும் கொண்டாடக் கூடாது என்றும்  அரசாணை உள்ளது. இது 1967ம் வருடம் அண்ணா முதல்வராக இருந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவாகும்.

ஆனால், அரசாணையை மீறி கிட்டதட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் காவல்நிலையங்களிலும் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை விழாக்கள் கொண்டாடப் படுவது வழக்கமாக இருக்கிறது.

சட்டவிரோதமாக நடக்கும் இவ்விழாக்களைத் தடுக்க திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வாய்ப்புள்ள இடங்களில் தடுத்தும் வருகிறது.

இந்த ஆண்டும் வரும் வெள்ளிக்கிழமை ஆயுதபூஜை வருகிறது. அதற்கு முதல் நாள் அரசு அலுவலகங்களில் கொண்டாட ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

திராவிடர் விடுதலைக் கழக தொண்டர்கள், அந்தந்த பகுதி காவல் நிலையத்தை அணுகி, இதைத் தடை செய்ய வலியுறுத்துங்கள். மேலும், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதற்கு எதிரான அரசு ஆணைகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளை காவல் நிலையத்துக்கு அனுப்பி வையுங்கள்.

அரசு அலுவலகங்களில் எம்மதத்தின் சாயலும் படியாதபடி பாதுகாப்பது நமது கடமை” என்று தனது அறிக்கையில் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.