நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் அனுபவ் ரவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று  அதிமுக பிரமுகர் அனுபவ் ரவியிடம் தனிப்படை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஜெ.மறைவைத் தொடர்ந்து, அவரது கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில் அடுத்தடுத்து ஏற்பட்ட டிரைவர் உள்பட பலரது மரணங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடித்திய நிலையில், ஆட்சி மாறியதும், மீண்டும் வழக்கு விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. கோடநாடு  எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா உறவினர் விவேக் ஜெயராமன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அதிமுக அம்மா பேரவை கோவை மாவட்ட இணைச்செயலாளர் அனுபவ் ரவியிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே தன்னிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என அனுபவ் ரவி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.