புதுடெல்லி:
விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு இரண்டு கேப்டன்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பிசிசி முன்னாள் தலைமை தேர்வாளர் கிரண் மோரே தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்தியா டிவி க்கு பேட்டியளித்த அவர் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் பங்கேற்று முடித்த பிறகு, ஒருநாள், டி20 அணிகளுக்கு ஒரு கேப்டனையும், டெஸ்ட் அணிக்கு ஒரு கேப்டனையும் நியமிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக ஒருநாள், டி20க்கு ரோஹித் ஷர்மாவும், டெஸ்ட் அணிக்கு விராட் கோலியும் நியமிக்கப்படலாம் என்றார் அவர்.

மேலும் பேசிய அவர் இந்திய அணிக்கும் இரண்டு கேப்டன்களை நியமிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நமது அணி தொடர்ந்து கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வருவதால் கேப்டன் விராட் கோலியின் ஆட்டம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படலாம் என்ற தகவல் எனக்குக் கிடைத்துள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய கிரண் மோரே கொரோனா காரணமாக நமது அணி அதிகமான கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவில்லை. இதனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகமான கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால், இரண்டு அணித்தலைவர்கள் அவசியமும் கூட. கோலியின் பணிச்சுமையைக் குறைக்க இது சிறந்த வழி என்றார் அவர்.