ஜெய்ப்பூர்

மோடி அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்ததின் நோக்கம் என்ன என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி கேட்டுள்ளார்.

நேற்று  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார்.

கார்கே தனது உரையில்,

”குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவுக்கு அழைக்கப்படவில்லை. ஆனால் நடிகர்-நடிகைகள் உள்படப் பலர் அழைக்கப்பட்டு இருந்தனர். இந்த செயல் குடியரசு தலைவருக்குச் செய்த மிகப்பெரிய அவமதிப்பு ஆகும்.

முன்பு நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டியபோது கூட அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு அவர் தீண்டத்தகாதவர் என்பதால் அழைக்கப்படவில்லை. இதே கட்டிடம் ஒரு தீண்டத்தகாதவர் மூலம் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தால், இயற்கையாகவே அதைக் கங்கை நீரால் கழுவ வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள்.

பாஜக பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை விரும்பாது. அப்படி இருக்கும்போது மோடி அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்ததன் நோக்கம் என்ன? ஏனென்றால் ஏராளமான எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளதால், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் இந்த மசோதா குறித்து அவர்களுக்கு நினைவு வந்திருக்கிறது.

குறிப்பாகக் காங்கிரசைச் சேர்ந்த ராகுல், சோனியா மற்றும் நான் உள்ளிட்டோர் இணைந்து ‘இந்தியா’ என்ற யோசனையுடன் வந்ததால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்த யோசனை அவர்களின் மனதில் வந்துள்ளது.”

என்று தெரிவித்துள்ளார்.