திருவனந்தபுரம்:

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த பெண்ணுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிதது கேரளா நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

சட்ட விரோத செயல்பாடு குற்றச்சாட்டில் யாஸ்மீன் முகமது சாகித் என்ற அந்த பெண்ணுக்கு எர்ணாகுளத்தில் உள்ள தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ) சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் குமார் இந்த தண்டனையை அளித்தார். அதோடு அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளார்.

பீகாரை சேர்ந்த யாஸ்மீன் இந்த வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அப்துல் ரஷீத் அப்துல்லா கடந்த ஆண்டு காசரோகாத் இளைஞர்களை மூளைச் சலவை செய்து குடும்பத்துடன் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்த்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் செல்வதற்காக காபூல் விமான நிலையம் செல்ல முயன்ற யாஸ்மீனை என்ஐஏ அதிகாரிகள் தடுத்து கைது செய்தனர். இந்த வழக்கில் மொத்தம் 15 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரஷீத் உள்பட `13 பேர் ஆப்கானிஸ்தானில் இருந்தனர். இதில் 3 பேர் விமான விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.