ஐதராபாத்:

ஆந்திராவுக்கு சிறப்பு நிதி வழங்கியதாக பொய்களை பரப்புவது ஏன்? என்று அமித்ஷாவுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

தே.ஜ.கூட்டணியிலிருந்து தெலுங்குதேசம் விலகியது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு பா.ஜ. தலைவர் அமித்ஷா கடிதம் எழுதினார். அதில், ‘‘ 3 ஆண்டுகளில் மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக 1,050 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், மாநில அரசால் 12 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மீதமுள்ள 88 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை’’ என்று கூறியிருந்தார்.

இதற்கு சந்திரபாபு நாயுடு பதில் கூறுகையில், ‘‘பா.ஜ. தலைவர் அமித்ஷா தனது கடிதத்தில், ஆந்திராவுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கியதாகவும், அதனை நாங்கள் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஆந்திர அரசிற்கு திறமையில்லை என சொல்ல வருகின்றனர். எங்களது ஆட்சியில் ஜிடிபி, விவசாயம் வளர்ச்சி பெற்றுள்ளது.

தேசிய அளவில் பல விருதுகள் பெற்றுள்ளோம். இது எங்களது சாதனை. நீங்கள் ஏன் பொய்யை பரப்புகறீர்கள்?. மத்திய அரசு வட கிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு சலுகை வழங்கி வருகிறது. ஆந்திராவுக்கு சிறப்பு சலுகை வழங்கினால் பல தொழிற்சாலைகள் இங்கு வரும்’’ என்றார்.