திருவனந்தபுரம்

கேரள உயர்நீதிமன்றம் சிபில் ஸ்கோர் குறைவாக உள்ளதைக் காட்டி கல்விக் கடனை நிராகரிக்க முடியாது என உத்தரவு இட்டுள்ளது.

ஒரு நபரின் கடன் பெற்ற மற்றும் கடனை திருப்ப் செலுத்தியது குறித்துத் தெரிந்து கொள்ள சிபில் ஸ்கோர் உதவுகிறது. ஒருவர் கடன் வாங்கி அதை சரிவர செலுத்தி வந்தால் சிபில் ஸ்கோர் நல்ல அளவில் இருக்கும். ஆனால் கடனை சரியாக செலுத்தவில்லை என்றால் சிபில் ஸ்கோர் குறையும்.  எனவே வங்கிகளில் கடன் வாங்கும்போது சிபில் ஸ்கோர் பார்த்தபிறகே கடன் வழங்குவது குறித்து வங்கிகள் முடிவு செய்கின்றன.

ஒரு மாணவரின் பெற்றோர் இதற்கு முன் இரண்டு கடன்கள் வாங்கியுள்ளனர். அதில் ஒரு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு மற்றொரு கடனில் 16,667 ரூபாய் தாமதமாகச் செலுத்தப்பட்டுள்ளது. அவர்களின் சிபில் ஸ்கோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த மாணவருக்குக் கல்விக் கடன் வழங்காமல் மறுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  இவ்வழக்கு விசாரணையின்போது, சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும் காரணத்தாலேயே கல்விக் கடன் வழங்காமல் மறுக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

கேரளா உயர் நீதிமன்றம்,

“நாளைய நாட்டை கட்டமைப்பவர்கள் மாணவர்கள். இந்த நாட்டை எதிர்காலத்தில் வழிநடத்தப் போவது மாணவர்கள். ஒரு மாணவருக்கு சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கிறது என்பதாலேயே அவருக்குக் கல்விக் கடன் வழங்காமல் மறுக்கக்கூடாது எனக் கருதுகிறோம்”

என்று தெரிவித்துள்ளது.