அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் கீழே விழுந்து நொறுங்கியது.

1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் நிரப்பப்பட்ட அந்த விமானம் கீழே விழுந்த மறுநொடி தீப்பிடித்து குபுகுபுவென எரிந்ததில் 241 பயணிகள் உயிரிழந்தனர்.

இதில் ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த நிலையில், விபத்துகள் தவிர்க்க முடியாதவை என்றும் உயிரிழப்பு துரதிஷ்டவசமானது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த விமானத்தில் பயணம் செய்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சிதா ஜி நாயர் என்ற 42 வயது பெண் செவிலியர் விடுமுறை முடிந்து லண்டன் திரும்பிய நிலையில் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அதற்கு அம்மாநில அமைச்சர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளரிகுண்டு தாலுகா வருவாய்த் துறை அலுவலகத்தில் இளநிலை கண்காணிப்பாளராக பணிபுரியும் பவித்ரன் என்பவர் ரஞ்சிதா நாயர் குறித்து அவதூறாக தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இவர் ஏற்கனவே இதுபோன்ற அவதூறு பதிவுகளை பதிவிட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது, ரஞ்சிதா-வின் சமூகத்தை குறிப்பிட்டுள்ள பவித்ரன், அரசு ஊழியராக இருந்துகொண்டு ரஞ்சிதா விடுப்பில் வெளிநாடு சென்று வேலை பார்த்து வருவதாக அவதூறு பரப்பும் நோக்கில் கருத்து பதிவிட்டிருந்தார்.

அவரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் அதை நீக்கிய அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கும் நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த ரஞ்சிதா கணவர், 2 குழந்தைகள் மற்றும் தாயாருடன் வாழ்ந்துவந்ததாகக் கூறப்படுகிறது.