டெல்லி: ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்   நடத்தி வருகிறது. இதன் எதிரொலியாக  இந்தியாவில் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. வெளி நாடுகளுக்கு செல்லும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

போர் காரணமாக,  ஈரானிய மற்றும் ஈராக் வான்வெளி மூடப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே  பாகிஸ்தான் வான்வெளியும் மூடப்பட்டு இருப்பதால்,  இந்திய விமான நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. இதனால்,  பாதுகாப்பு கருதி பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்டவை குறித்து ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

 ”ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற இராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேல் தூதர் டேனி டானன் தெரிவித்துள்ளார். ஈரானின் அணு மற்றும் ஏவுகணை தளங்களை குறிவைத்து தாக்குவது தான் இந்த நடவடிக்கையாக இருக்கும். ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் வீசப்பட்ட குண்டுகளால் பல கட்டடங்கள் தீப்பற்றி எரியும் நிலையில், ஈரானின் வான்வழி மூடப்பட்டது. ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்படுள்ளது. இதனால், 2 நாடுகளுக்கு இடையே போர்மேகம் சூழ்ந்துள்ளது.

இதன் காரணமாக ஈரானில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. அதேபோல், ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என்பதால், இஸ்ரேலும் தனது வான்வெளியை மூடியுள்ளது. இந்த நிலையில் ஈரான், இஸ்ரேல் வழியாக இந்தியாவுக்கு வரும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  இந்தியாவில் இருந்து இஸ்ரேல், ஈரோன் உள்பட அந்த வானிவெளி பகுதி வழியாக செல்லும் விமானங்கள், உடனடியாக திருப்பி அழைக்கப்பட்டது.    அதுபோல,  லண்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் இருந்து டெல்லி நோக்கி வரும் விமானங்கள், ஈரான் வான்வெளியை தவிர்த்து மும்பைக்கு மாற்றி அனுப்பப்பட்டிருப்பதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து ஈரான் வழித்தடத்தில் செல்லும் விமானங்கள் ரத்து செய்வதற்கு வாய்ப்புள்ளது.