அகமதாபாத் விமான விபத்தில் 241 பயணிகள் உட்பட மொத்தம் 265 பேர் உயிரிழந்த நிலையில் அதில் 6 பேர் முகங்கள் மட்டுமே அடையாளம் காணும் வகையில் இருந்தது.

ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்ததில் அதன் அருகில் இருந்த மரம் செடி கொடி பறவைகள் என பல்வேறு உயிரினங்கள் மட்டுமன்றி இரும்புக் கம்பிகளும் அந்த தீயில் உருகியது.

இருப்பினும், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிர்பிழைத்த நிலையில் தற்போது பகவத் கீதை புத்தகம் ஒன்று எந்தவித சேதமுமின்றி இருந்ததாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.

விமான விபத்து நடந்த இடத்தில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒரு இளைஞர் கையில் பகவத் கீதையுடன் நிற்கும் வீடியோவில், இவ்வளவு பெரிய தீ விபத்துக்குப் பிறகும், இந்த புத்தகம் பாதுகாப்பாகவும், நல்ல நிலையிலும் இருப்பதாக அந்த இளைஞன் கூறியுள்ளார்.

பகவத் கீதையின் அட்டைப்படத்தின் ஒரு பகுதி எரிந்துள்ளது, சில ஆரம்ப பக்கங்களிலும் எரியும் அடையாளங்கள் உள்ளன. ஆனால் உள்ளே இருக்கும் அனைத்து பக்கங்களுக்கும், புத்தகத்தில் உள்ள கிருஷ்ணர் உட்பட மற்ற கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் படங்களுக்கும் எதுவும் ஆகவில்லை.

இது அந்த விமானத்தில் பயணித்த பயணியுடையதாக இருக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இருந்தபோதும் இது கடவுளின் அற்புதம் என்று அந்த வீடியோவில் கூறப்படுவதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இது மூடநம்பிக்கையின் உச்சம் என்றும் பதிவிட்டுள்ளனர்.