சிவகங்கை: உலகின் மூத்த நாகரிகம் தமிழ் நாகரிகம்’ என்பதை உலகு பறைசாற்றிய கீழடியில் நடைபெற்ற ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், 8வது கட்ட பணிகள் எப்போது தொடங்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழடி, அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட தளங்களில் பிப்ரவரி 13-ம் தேதி தொடங்கிய அகழாய்வு பணிகள் நிறைவு பெற்றன. முன்னதாக கீழடியில் இன்று ஏழாம் கட்ட அகழாய்வு பணிகளைத் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார். அதன்படி கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய நான்கு இடங்களிலும் அகழாய்வு ஆராய்ச்சி ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் நடைபெறும் என்றும், கீழடியில் சர்வதேச தரத்தில் ரூ.12.21 கோடி மதிப்பீட்டிலான தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி கீழடியில் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வந்தன. கொந்தகை, மணலூர், அகரம் பகுதிகளிலும் ஆய்வுகள் நடைபெற்றன. மணலுாரில் எதிர்பார்த்த அளவு தொல்லியல் பொருட்கள் கிடைக்காததால், பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. மற்ற மூன்று தளங்களிலும் தலா எட்டு குழிகள் தோண்டப்பட்டு உறை கிணறுகள், தந்தத்தால் செய்யப்பட்ட பகடை, தங்க காதணி, உறை கிணறுகள், சிவப்பு நிற பானை உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.
இதுவரை நடத்தப்பட்ட 6 கட்ட அகழ்வாய்வைவிட 7வது கட்ட அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் ‘உலகின் மூத்த நாகரிகம் தமிழ் நாகரிகம்’ என்பதை நிரூபிக்கும் வகையிலான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. தமிழர் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான பொருட்கள் அங்கு கிடைத்து வருகின்றன.
கீழடி அகழாய்வில் ஆதன், உதிரன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட ஓடுகள் ஏற்கெனவே கிடைத்திருந்த நிலையில், 13 எழுத்துகள் கொண்ட பானை ஓடுகள் இப்போது கிடைத்திருக்கின்றன. இந்த ஓடுகள் 2600 முதல் 3000 ஆண்டுகளுக்கு முன்பே புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதால், தமிழர்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பே கல்வி அறிவு பெற்றிருக்கலாம் என்ற நம்பிக்கை எழுந்திருக்கிறது. இது விரைவில் நிரூபிக்கப்படக் கூடும்.
தங்கக் காதணிகள், கல் உழவு கருவி, இரும்பு ஆயுதம், உறைகிணறு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட 6 கட்ட அகழாய்வுகளில் கிடைத்த பொருட்களை விட இவை பழமையானவை என்பது ஒருபுறமிருக்க, இவை நவீன பயன்பாடு கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவை மட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன் 60 செ.மீ உயரம், 34 செ.மீ விட்டம், 24. செ.மீ. விட்டமுள்ள வாய்ப்பகுதி கொண்ட சிவப்பு வண்ணப் பானை கிடைத்திருக்கிறது.
இது தொல்லியல் ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்திருக்கிறது. இந்தப் பானை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மேலும் 5 பானைகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் இன்னும் கூடுதலாக அகழாய்வு நடத்தினால் இன்னும் பல வியப்புகள் வெளிப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆனால், அரசு அறிவித்துள்ள , செப்டம்பர் மாதத்தின் முற்பகுதியில் ஆய்வுகள் முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், தற்போது 7வது கட்ட அகழ்வாய்வு பணிகள் முடிவடைந்து உள்ளன. இந்த அகழ்வாய்வுப்பணியின்போது, தமிழர் நாகரிகத்தின் தொன்மைக்குக் கட்டியங்கூறும் வகையில் மேலும் ஏராளமான பொருட்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் 7வது கட்ட அகழ்வாய்வுக்கான காலத்தை மேலும் சில மாதங்கள் நீட்டிக்க வேண்டும் ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்து வரும் நிலையில், தமிழகஅரசு விரைவில் 8வது கட்ட அகழ்வாய்வுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.