டலூர் கண்ணகி ஆணவக்கொலை செய்யப்பட்ட வழங்கில் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.  குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும்,  12பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில், கடந்த 2003 ஆம் ஆண்டு இருவேறு சமூகத்தைச் சேர்ந்த கண்ணகி, முருகேசன் ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரையும் கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைத்தனர். இதனால், அவர்கள் ஊரை விட்டு வெளியேறி, தெரிந்தவர்கள், நண்பர்கள் பலரது ஊர்களுக்கு சென்று தங்கி வந்தனர்.

காதல் தம்பதியினர் தங்கியிருந்த இடத்தைஅறிந்த கண்ணகியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களை நைசாக பேடிச புதுக்கூரைப் பேட்டைக்கு அழைத்து வந்தனர். பின்னர் முந்திரித்தோப்பில் இருவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்ததுடன், அவர்களின் உடல்களையும் எரித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொல்லப்பட்ட  கண்ணகியின் தந்தை துரைசாமி, அவர் மகன் மருதுபாண்டியன், ரங்கசாமி, அய்யாசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், ஓய்வுபெற்ற டிஎஸ்பி செல்லமுத்து ஆகிய 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு பின்னர் 2004ம் ஆண்டில் சிபிஐக்கு மாற்றப்பட்டது. சுமார் 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த  இந்த வழக்கில், கடந்த ஏப்ரல் மாதம் இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று வழக்கை விசாரித்த நீதிபதி உத்தமராஜா பரபரப்பு தீர்ப்பை வழங்கினார்.

தீர்ப்பில், கண்ணகி தம்பதியினர் ஆணவக் கொலையை கடுமையாக கண்டித்துடன், இது ஒரு காட்டுமிராண்டித்தனமான கொலை கடுமையான கூறினார். மேலும், குற்றவாளிகள், ஆணவத்துடனும் அச்சமற்ற தன்மையுடனும் குற்றங்களை செய்துள்ளனர். இந்த கொலையைக் கண்டு மற்றவர்கள் அச்சமடையவேண்டும் என்ற எண்ணத்திலேயே, அவர்கள்  ஆணவக்கொலை செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

இந்த கொடுமையான கொலை வழக்கில்,  கொலை செய்யப்பட்ட கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்குத் தூக்கு தண்டனை விதிப்பதாக உத்தரவிட்டார். குற்றவாளி ஏககாலத்தில் தண்டனை அனுப விக்க வேண்டும் என கூறிய நீதிபதி, கண்ணகி எரித்ததாகத் தான் தமிழ் மண்ணின் வரலாறு உள்ளது எனவும், தற்போதைய சாதி ஆணவக்கொலை கண்ணகியால் எரிக்கப் பட்டதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், வழக்கில் தொடர்புடைய, 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாகவும், இந்த வழக்கு தொடர்புடைய அப்போதைய விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் செல்ல முத்து மற்றும் உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.