அத்தியாயம்-16                                                                     உஷா

ஷாவுக்கு அவன் எலும்புகளை நொறுக்கும் உத்தேசமில்லை என்றாலும் அவன் பயப்பட்டான்.  இத்தனை இறுக்கமாய் இவள் நம்மைத் தழுவுவது உதட்டோடு உதடு பதித்து முத்தம் என்ற பெயரில் உயிர் குடிக்கத்தான் என்று நிச்சயமாய் நம்பினான்.

‘ராட்சசியே தள்ளிப்போ’ என்று சொல்ல நினைத்தான்.  வில்பிடித்து வீரமேறிய கைகளால் அவளை அள்ளி எறிய நினைத்தான்.  எல்லாம் நினைப்பளவிலேயே நின்றது.  எதையும் செயல்படுத்த அவனால் முடியவில்லை.

‘யார் இவள்..நம்மை என்ன செய்யப் போகிறாள்’ எதுவும் அவனுக்குப் புரியவில்லை.  ஆனால் அவளுடைய செய்கை அவனுக்குப் பிடித்த மாதிரிதான் இருந்தது.

“பாட்டி” சத்தமாகத்தான் கூப்பிட்டான்.  குரல் சன்னமாகத்தான் கேட்டது.

அவன் கண் விழித்து விட்டான் என்று தெரிந்ததுமே உஷா அவனை விட்டு விலகுகிறாள்.  ஓடிப்போய் கதவுக்குப் பின்னே ஒளிந்து கொண்டாள். அப்போதும் அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டுதானிருந்தாள்.

அவன் முகத்திலே உஷா பற்ற வைத்திருந்த காமத்தின் தாபமும், பயத்தின் சாயலும் சமவிகிதத்தில் படர்ந்திருந்தது.  படக்கென மஞ்சத்திலிருந்து எழுந்து அமர்ந்தான்.  கையை ஒரு முறை இறுக்கமாய் கிள்ளிப் பார்த்தான். ‘ஆ’ என்ற சத்தமும் போட்டான்.

சுற்றிலும் அறையை நோட்டம் விட்டான்.  இது அவன் தூங்கும் அறை இல்லை.  துவாரகை அரண்மனையில் இப்படியொரு அறை இருப்பதாகவும் அவனுக்கு நினைவில்லை.

அப்படியானால் நாம் எங்கே இருக்கிறோம்? இப்போது அவன் முகத்திலே பயத்தின் அளவு அதிகமாய் இருந்தது.  அறைக்குள் பரவியிருந்த தாமரைப் பூவிதழின் வாசம் அவனுக்குப் பிடித்திருந்தது.

அந்த வாசம் உஷாவின் மேனியின் வாசம்.  இன்னும் சற்று நேரம் கண் மூடியே படுத்திருக்கலாமே.. துணிச்சலாய் முத்தமிட்டவள் இன்னும் சற்று தாமதித்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பாள்..

ஆடை சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டான்.  அவனுக்குச் சற்று அவமானமாகவும் இருந்தது.

தன்னை தழுவியவள் எங்கே போனாள் என்று தேடிப் பார்த்தான்.  அவளைக் காணவில்லை.  கட்டிலை விட்டு இறங்கினான். அறையின் வாசல் நோக்கி நடந்தான்.

அவன் இரண்டு அடிதான் எடுத்து வைத்திருப்பான்.  அந்த வாசல் வழியாக சில பெண்கள் நுழைந்தனர்.  அனைவருடைய கைகளிலும் தங்கத் தாம்பாளங்கள்.  ஒன்றிலே பட்டாடை, ஒன்றிலே பால் பழங்கள், ஒன்றிலே வாசனைத் திரவியங்கள்.

“நான் எங்கே இருக்கிறேன்.  நீங்களெல்லாம் யார்? உங்கள் தலைவியா அவள். அந்த ராட்சசி எங்கே?”

வந்தப் பெண்கள் கொல்லெனச் சிரித்தார்கள்.

அவன் பின்புறமிருந்தும் ஒற்றைச் சிரிப்பு கேட்டது.  பூஜை நேரத்தில் கிணுகிணுக்கப்படும் கைமணி ஓசை போலிருந்த அந்தச் சிரிப்பிலே ஒரு மோக மயக்கமும் கலந்திருந்தது.

“என் தாத்தா கிருஷ்ணரிடம் தேவலோகம் போக வேண்டும் என்ற சிறு பிள்ளையாய் இருக்கும் போது  அடிக்கடி கேட்பேன்.  சமயம் வரும்போது நீயே போகப் போகிறாய் என்பார்.  அந்தச் சமயம் வந்து விட்டதா.. உங்களில் யார் ஊர்வசி. யார், மேனகை..

அந்தப் பெண்கள் மீண்டும் சிரித்தார்கள்.  இப்போதும் தன் பின்புறமிருந்து சிரிப்பு வராதா என்று எதிர்பார்த்து ஏமாந்தான்.

“என்ன வேடிக்கை? எல்லாவற்றையும் அப்படி வைத்துவிட்டுப் போங்கள்..” – கம்பீரமான குரல் கட்டளையாய் ஒலித்தது.

இந்தக் குரல் நமக்கும் ஏதாவது கட்டளை இடுமானால் – நம்மால் தட்ட முடியாது என்று நினைத்துக் கொண்டான்.  ஏதாவது கட்டளை இட வேண்டும் என்றும் விரும்பினான்.

அவள் அவன் மனதைப் படிக்கும் வித்தை தெரிந்தவளா என்ன..

அவள் நினைத்தபடியே நடந்தது.  ” முதலில் நீராடி உடைமாற்றிக் கொள்ளுங்கள்.  உணவருந்தலாம்..”  என்றாள்.  சற்று முன் அறைவதுபோல் ஒலித்த குரலா இது.. இப்படிக்குழைகிறது!

உண்மையில் அவனுக்கு அப்போது பசித்தது.  நீராடிவிட்டு உணவருந்தலாம்.

கிண்ணத்தில் எண்ணெய் இருக்கிறது.  அவனாகத் தேய்த்துப் பழகியிருந்ததால்தானே..

கிருஷ்ணருக்குப் பேரனாய், பிரதியும்னன் மகனாய்.. துவாரகை யின் செல்லப்பிள்ளையாய்.. அரண்மனை சேடிப் பெண்களின் அன்புக்கெல்லாம் பாத்திரமானவனாய் வாழ்ந்தவன் அல்லவா அவன்.

“என்ன.. எண்ணெய் தேய்த்து பழக்கமில்லையோ.. அதுவும் நல்லதுக்குத்தான், நானே தேய்த்து விடுகிறேன்.  இனி நான்தானே எல்லாவற்றையும் செய்யவேண்டும்..”

‘சொல்லிக் கொண்டே உஷா அவனை நோக்கி வருவதை அவன் அறிந்து கொண்டான்.  ஒரு இமைப்பொழுது மட்டுமே பார்த்தி ருந்தாலும் மனசுக்குள் பாறையின் எழுத்துபோல் பதிந்து விட்ட அவள் முகத்தைப் பார்க்கும் துணிச்சல் வராமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தான்.

“எனக்கு எல்லாம் இனி நீதானா.. யார் நீ?”

உஷா, “உம்மை உம் அரண்மனையிலிருந்து கடத்திக் கொண்டு வந்துவிட்டேன்.”

“காற்றும் அனுமதியில்லாமல் நுழைய முடியாத துவாரகைக்குள் புகுந்து என்னை கடத்தினாயா.. உண்மையைச் சொல்.. இது என் பாட்டி ருக்மணியின் வேடிக்கைதானே?”

உஷா அவனுக்குப் பதில் சொல்லவில்லை.  எண்ணெய் கொப்பறையை எடுத்து – அவனுக்குத் தேய்த்து விடும் வேலையில் ஈடுபட்டாள்.

“உறங்கும்போது கட்டிப் பிடித்தாய். இப்போது மனைவிபோல் உரிமையாய் எண்ணெய் தேய்த்து விடுகிறாய்..”

“அதுதான் சொன்னேனே.  நான்உம்மை காலிக்கிறேன் என்று.  நீரும் என்னை காதலித்துதான் ஆக வேண்டும்.  நீர் முடியாது என்று மறுத்தாலும் நான் விடப்போவதில்லை.”

” யாரங்கே.. இந்தப் பெண்ணை கைது செய்யுங்கள்..” .. ஒரு இளவரசனுக்கு உரிய கம்பீரத்தோடு கட்டளை பிறப்பித்தான்  அனிருத்தன்.

ஒரு எறும்புகூட அவன் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உள்ளே நுழையவில்லை.

“என்ன நினைப்பில் இருக்கிறீர் என் காதலரே.. நீர் இருப்பது துவாரகை இல்லை.  உம் கட்டளைக்கு அடிபணிய இங்குள்ளவர்கள் உமது அடிமையுமல்ல. இப்போதைக்கு நான் ஒருத்திதான் உமக்கு அடிமை.  நான் நினைத்தால் இந்த சோளிதபுரத்தையே உமக்கு அடிமையாக்க முடியும்.”

“சோளிதபுரமா இது.. அதிகமாய் விளையாடாதே பெண்ணே.  இதுவரை நான் பொறுமை காத்ததே உன் அதிர்ஷ்டம் என்று நினைத்துக்கொள்.  சோளிதபுரம் எவராலும் வெல்ல முடியாத மாமன்னன் பாணாசுரன் நாடு.  அதை நீ எனக்கு அடிமையாக்கப் போகிறாயா. நிச்சயம் நீ பைத்தியம்தான்..” என்றான்.

“காதலரே, நான் வேறு யாருமில்லை.  நீர் குறிப்பிட்ட மாமன்னர் பாணாசுரனின் மகள் உஷா.  நீர் இப்போது இருக்கும் இந்த இடம் என் அந்தப்புரம்.” என்றவள் அவன் முன்னால் வந்தாள்.

அவன் அவள் முழு அழகையும் பார்த்துவிட முயன்று தோற்றான்.  அவன் கண்களில் ஆச்சர்யம் அலை அலையாய் நெளிந்தது.

“இன்னுமா நம்ப முடியவில்லை.  சில நாட்கள் முன்பு நான் கனவு கண்டேன்.  அதிர் நீரே வந்தீர்.  அப்போது உமது பெயர் அனிருத்தன் என்றோ.. நீர் துவாரகை இளவரசன் என்றோ எனக்குத் தெரியாது.  கனவில்  கண்டவர் யாராக இருந்தாலும் கணவனாக அடைவதென தீர்மானித்தேன்.  என் தோழி சித்திரலேகை என் மனசை கண்டு பிடித்து விட்டாள்.  அவளுக்கு வான் வழியாக நினைத்த இடத்தற்குச் சென்று வரும் திரஸ்கரிணி வித்தைதெரியும்.  அவள்தான் உம்மை துவாரகையிலிருந்து இங்க கொண்டு சேர்த்தாள்.”

” நீ சொல்வது நம்பும் படியாக இல்லையே..”

“நீர் நம்பவேண்டும் என்று நான் சொல்லவில்லையே! எனக்குத் தேவையெல்லாம் என்னை நீர் காதலிக்க வேண்டும்..”

“காதல், நிர்பந்தத்தால் வராது என்பது நீ படிக்கவில்லை போலிருக்கிறது..”

“நாம் படித்த பாடங்கள் எல்லாமே பொய்.  நெருப்பு காய்ந்த விறகில்தான் பிடிக்கும் என்பது சித்தாந்தம்.  ஈர விறகிலும் தீ எரிய வைத்தது வேதாந்தம். நம் காதல் வேதாந்ததுக்கு, நீர் காதலிக்காவிட்டால் உமக்கும் சேர்த்து நானே காதலிப்பேன்.  ஆனால் என்னை நீரும் காதலிக்கிறீர் என்பது எனக்குத் தெரியும்.”

“நிச்சயமாய் இல்லை.”

“காதலுக்குப் பொய்யும் ஒரு அழகுதான் என்னவரே.  மாயவன்   ஸ்ரீகிருஷ்ணர் பேரர் இத்தனை நேரமாய் இந்த அறைக்குள்ளே கட்டுப்பட்டுக் கிடக்கிறீரே அது எதனால் தெரியுமா? முதல் பார்வையிலேயே உம் மனசை என்னிடம் பறி கொடுத்து விட்டீர். என்னைப் பார்க்க வேண்டும் என்று உமது கண்கள் ஏங்க ஆரம்பித்துவிட்டன.  உமது உறுப்புகள் எதுவும் என்னைப் பார்த்தப்பின் உமது சொல் பேச்சை கேட்கவில்லை.”

“நன்றாகப் பேசுகிறாய்.”

“உண்மையைப் பேசுகிறேன்.  அது உமக்குப் பிடித்திருக்கிறது.  வாரும்.. சீக்கிரம் நீராடிவிட்டு வந்துவிடலாம்.  மற்ற வர்களுக்குத் தெரிந்தால் ஆபத்து?”

“யாருக்கு ஆபத்து?”

“உமக்குத்தான்.  பாணாசுரனின் மகளின் அந்தப்புரத்துக்குள் ஆண் மகன் நுழைந்தால் சும்மாவா விடுவார்கள்? சிரச்சேதம்தான்.”

நானாக வரவில்லையே.  நீதானே கடத்தினாய்.”

“துவாரகைக்கு வந்து நான்தான் உம்மை கடத்தி வந்தேன் என்பதை எங்கள் வீரர்கள் நம்ப வேண்டுமே.”

“அப்படியானால்..”

” யாருக்கும் தெரியாமல் உம்மை இங்கேயே வைத்திருக்கப் போகிறேன்.  கால நேரம் பார்க்காமல் காதலிக்கப் போகிறேன். ‘நான் சொன்னபடி நடப்பதனால் ஆபத்தில்லை.  விடுதலை மட்டும் கிடையாது..”

“ஆபத்துக் அஞ்சுபவனல்ல நான்.  என்னிடம் என் வில்லிருக்கிறது.”

“இல்லை.  அது இப்போது துவாரகையில் இருக்கிறது.  வில்லுக்கெல்லாம் அவசியமில்லை.  முதலில் நீராடுவோம்.  நம் சண்டையைப் பிறகு வைத்துக் கொள்ளலாம்.  ‘ம் போகலாம்” என்றாள். ‘ம் போகலாம்’  என்பதில் சீண்டலும் குழைவும் காணாமல் போயிருந்தது.  கம்பீரமாய் உத்தரவு போடும் தோரணை இருந்தது.

அனிருத்தன் இவளைப் பின் தொடர்ந்தான்.  அவள் அவனை நீராட்டினாள்.  தலை துவட்டி விட்டாள்.  அவன் என்ன உடுத்த வேண்டும் என்பதை அவளே முடிவு செய்தாள்.  ஷோபன அறைக்கு மறுபடியும் அழைத்து வந்தாள்.

‘சித்திரலேகை’ என்றாள்.  தோழி ஓடிவந்து அகில் புகைத்தாள்.  உஷாவின் கண்கள், ‘இனி நீ போலாம்’ என்ற ஜாடை காட்டியது.  சித்திரலேகை வெளியேறினாள்.

“உங்கள் நாட்டிலே வழக்கமே இப்படித்தானா.. விருந்தினருக்குப் புசிக்க எதுவுமே தரமாட்டார்களா?”

“பசி வயிற்றுக்கா.. உடம்புக்கா..”

“பெண் என்ற வெட்கம் இருக்கிறதா.. ராட்சசி..”

“கணவனிடம் மனைவிக்கு எதற்கு வெட்கம்? அதுவும் கட்டிலறையில்!” – பேசிக் கொண்டு இருக்கும்போதே அவள் கை ஆரஞ்சுப் பழத்தின் தோல் நீக்கி – சுளையைத் தனியே எடுத்துப் பல்லால் கடித்து வித்தை வெளியேற்றினாள்.  கொஞ்சம் சுவைத்துப் பார்த்தாள்.  ‘ம் தித்திக்கிறது’  என்றாள்.  அவனிடம் நீட்டினாள்.

“இந்த எச்சிலையா நான் சாப்பிடவேண்டும்.  முடியாது..” என்றான்.  எச்சில்படாத இந்தச் சுளைகள்தான் வேண்டும்.  என அவள் உதட்டைக் காட்டினான்.

“என்னைப் பிடிக்கவே இல்லை என்றீர்கள்?”

“காதலுக்குப் பொய்யும் ஒரு அழகு என்றாயே..”

“நான் உங்களை கனவில் கண்டது போல், நீங்களும் என்னை கனவில் கண்டீர்களா?”

“பலமுறை பார்த்திருக்கிறேன்.  உன்னை மட்டுமல்ல.  உன் தோழிகளையும் பார்த்திருக்கிறேன்.  குறிப்பாய் அந்த சித்திரலேகை.. அவள்தான் எத்தனை அழகு..”

“திருடா!” என்றவள் அதற்கு மேலும் அவனைப் பேசவிட்டு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.  கண்காணா தேசத்திலிருந்து கடத்தி வந்தவளுக்கு கைக்கெட்டும் நிலையில் இருப்பவனைக் கைது பண்ணுவதா கடினம்?

அவனைப் பிடித்து இழுத்தவள், திடீரென்னு என்ன நினைத்தாளோ.. அவனை விலக்கினாள்.  “உண்மையாக என்னை நீ காதலிக்கிறாயா? என் நிர்பந்தத்திற்காக நடிக்கிறாயா?” என்று கேட்டாள்.  அப்போது அவள் கண்கள் ஈரமாக இருந்தது.

“காதலிக்காமலா உன் கைகளுக்குள் கட்டுப்பட்டுக் கிடக்கிறேன்” என்றான்.

அப்படி சொல்லிவிட்டாலும், உண்மையாகவே அவளைக் காதலிக்கிறோமா என்ற கேள்வி அவன் மனசுக்குள் எழுந்தது.

அனிருத்தன் அவளைக் காதலிக்கிறானோ இல்லையோ.  அவளுடைய துணிச்சல் அவனுக்குப் பிடித்திருந்தது.  மனதுக்குள்ளேயே காதலை மூடி வைத்து புழுங்கிச் சாகும் பெண்கள் மத்தியில் அவனைக் கடத்தி வந்த அவளுடைய வீரம் அவனுக்குப் பிடித்திருந்தது.

அந்த வீரத்திற்கு  மரியாதை செய்ய வேண்டியது கடமை என்று அவனுக்குள் ஒரு குரல் உரக்கக் கூவியது.  இவை எல்லாவற்றையும் தாண்டி அவளை நினைத்தால் உடம்பெல்லாம் ஒரு சுகம்  பரவியது.

அவன் அவள் காதருகில் மெல்லக் குனிந்து “உஷா” என்றான்.  இடது கையால் இடுப்பை வளைத்து – பிடியை இறுக்கினான்.

அந்தப் பிடியில் அவனுடைய காதல்தான்  வெளிப்பட்டிருக்க வேண்டும்.  இல்லையென்றால் உஷா அத்தனை உற்சாகமாயிருக்கமாட்டாள்.

எலும்புகள் நொறுங்கிவிடும் அபாயம் இப்போது இருவருக்குமே ஏற்பட்டது.!