“காப்பிரைட்: அதிரவைக்கும் பின்னணிகள்” என்ற கட்டுரையின் இறுதி பாகம் இது. இதில், ஆடியோ நிறுவனங்கள் எப்படி படைப்பாளிகளை ஏமாற்றுகிறது என்பதைப் பார்ப்போம்…

செல்ஃபோன்களின் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைய நிலையில், ஏறத்தாழ 115 கோடி செல்ஃபோன்கள் நம் நாட்டில் புழங்குகின்றன என்கிறது ஒரு கணக்கு. அதில், தமிழ்நாட்டில் மட்டும் ஏழு கோடியே ஒரு லட்சம் செல்ஃபோன் கனெக்க்ஷன்கள் இருக்கின்றனவாம்.

அந்த ஏழு கோடியில் பாதி பேருக்கு மேல் “ரிங் டோன்”கள் வைத்திருப்பவர்களாக இருப்பார்கள் . அதாவது சுமார் நான்கு கோடி ரிங் டோன்ஸ்.

நீங்களோ அல்லது உங்களது நண்பரோ கூட ஏதாவது ரிங் டோன் வைத்திருப்பீர்கள். அது சினிமா பாடலாகவும் இருக்கலாம் அல்லது பக்திப் பாடலாகவும் இருக்கலாம்…அந்த ரிங் டோன் சேவைக்காக, உங்களுக்கு சேவை வழங்கும் செல்ஃபோன் நிறுவனம், 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை உங்களிடமிருந்து கட்டணமாக வசூலிக்கிறது என்பது உங்களுக்கு தெரியும் ! அதில், அந்த ரிங் டோனுக்குண்டான ராயல்டியாக, “இரண்டு ரூபாய் மற்றும் இருபது பைசாக்களை” ஆடியோ நிறுவனங்களுக்கு கொடுக்கிறது என்பது தெரியுமா..?

இந்த வகையில், கடந்த 6 ஆண்டுகளில்…ஆடியோ நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட  தொகை எவ்வளவு அறிவீர்களா…? சுமார் 360 கோடி ரூபாய்கள் !

ஆம், அந்த முன்னூற்று அறுபது கோடி ரூபாயில் படைப்பாளிகளின் பங்கு எவ்வளவு என்று சொல்லட்டுமா…? 180 கோடி ரூபாய் !

ஆம், இந்த நாட்டின் ஏழ்மை நிலையில் இருக்கும் படைப்பாளிகள் 180 கோடி ரூபாய்களுக்கு சொந்தக்காரர்கள். ஆனால், அது அநியாயமாக மறுக்கப்பட்டிருப்பதால், இன்று ஏழ்மை நிலைக்கு வலிந்து தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

படைப்பாளிகளுக்கு உரிய உரிமையை புறம் தள்ளி மொத்தமும் எங்களுக்கே என்று அள்ளிக் கொண்டு போகிறார்கள் ஆடியோ நிறுவனத்தினர் .

இந்த படைப்பாளிகளுக்கு தமிழ் தவிர வேறு மொழிகள் எதுவும் தெரியாது. இதில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலும் பள்ளிப் படிப்பைக் கடக்காதவர்களாக இருக்கிறார்கள். அதிர்ந்து பேசத் தெரியாத மென்மையான படைப்பாளிகளாகவே இவர்கள் இருப்பதால் ஆடியோ நிறுவனங்கள் மிக எளிதாக இவர்களை ஏமாற்ற முடிகிறது.

இதில் கூத்து என்னவென்றால், ஒரு கட்டத்தில்… அதுகாறும் ராயல்டியை வசூலித்துக் கொண்டி ருந்த IPRS அமைப்பையே  புறக்கணித்து, தாங்களே நேரில் சென்று வசூலிக்க முடிவெடுத்தார்கள் ஆடியோ நிறுவனத்தினர். அதாவது, படைப்பாளிகளுக்கே பங்கு கொடுக்கவில்லை என்னும் போது, IPRS க்கு எதற்கு பங்கு கொடுக்க வேண்டும்…? நாமே முழுதாக எடுத்துக் கொள்வோமே என்று முடிவெடுத்தார்கள்.

அப்போது ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான் SIMCA . ( SOUTH INDIA MUSIC COMPANIES ASSOCIATION ) தென்னிந்திய ஆடியோ கம்பெனிகளின் அமைப்பு.

இந்த SIMCA வில் பக்திப்பாடல்கள் தயாரிக்கும் ஆடியோ நிறுவனங்களும், க்ளாஸிகல் ஆல்பங்கள் வெளியிடும் நிறுவனங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மும்பாய் – டெல்லி என்று பறந்து பறந்து சென்று சம்பந்தப்பட்ட செல்ஃபோன் அதிகாரிகளிடம் “எங்களிடமே மொத்தமாய் கொடுத்து விடுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்..” என்று பேசி சரிக்கட்டி முடிப்பதற்கு தென்னிந்திய ஆடியோ தயாரிப்பாளர்களால் ஒன்று கூடி ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் SIMCA. தென்னிந்திய நிறுவனங்கள் என்று பெயர் இருந்தாலும் இதில் கணிசமாக வட நாட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

இவ்வாறு, தென்னிந்திய வியாபாரிகள் ஒன்று கூடி ஆரம்பித்த இந்த SIMCA அமைப்பால்  எரிச்சலான வட நாட்டு முதலைகள் நிறைந்த IPRS அமைப்பு, தன் சகாவான IPL அமைப்பை சீண்டிவிட்டது. IPL அமைப்போ தன் குண்டாந்தடியை ஓங்கியது. எங்களிடம் உறுப்பினராக தகுதியே இல்லாதவர்கள் என்று சொல்லி SIMCA வின் மேல் ஒரே போடாக போட்டது.

சினிமா பாடல்களை வெளியிட்டவர்கள் மட்டும்தான் எங்களிடம் உறுப்பினராக முடியும். அதுவும் 50 ஆல்பங்களாவது கைவசம் இருக்க வேண்டும். பக்திப் பாடல்கள் – க்ளாஸிகல் ஆல்பங்கள் வைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கெல்லாம், நாங்கள் வசூலிக்கும் பணத்தில் பங்கு கேட்க தகுதியேயில்லை என்றது.

SIMCA வோ ஏன் எங்களுக்கு என்ன குறைச்சல் என்று மல்லுக்கு நிற்கிறது. அந்த பஞ்சாயத்து கோர்ட்டில் இருக்கிறது.

ஆம், படைப்பாளிகளை வஞ்சிக்கும்  SIMCA அமைப்பை, IPL அமைப்பு வஞ்சித்து விட்டது.

இந்த இரண்டு போராட்டத்துக்கு இடையில் இருக்கும்  பெரிய வித்தியாசம் என்னவென்றால்… SIMCA – IPL இரண்டு அமைப்புகளும் தங்களது தொப்பைக்கு மேல் பேண்ட்டை இழுத்து விட்டுக் கொண்டு சண்டைக்கு நிற்கின்றன.

ஆனால், படைப்பாளியோ ஒட்டிய வயிற்றில் ஈர வேட்டியை இறுக்கிக் கொண்டு ஆளரவமற்ற வீதியில்  நியாயம் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

ஒரு ரிங் டோன் விற்கப்படுகிறது என்றால்,அந்த ரிங் டோனில் இருக்கும் இசைக்கு சொந்தக்காரர் யார்…? அதில் உச்சரிக்கப்படும் வரிகளுக்கு சொந்தக்காரர் யார்…? அவர்களுக்குண்டான உரிமைத் தொகை எங்கே…? என்றெல்லாம் எளிய படைப்பாளியின் சார்பாக பேச இங்கே யாருமில்லை !

ரிங் டோன் அடங்கிய மாஸ்டர் கேஸட் ஆடியோ நிறுவனங்களிடம்  இருப்பது உண்மைதான். அதற்குரிய பங்கை எடுத்துக் கொண்டு படைப்பாளிகளுக்குரிய பங்கை கொடுத்துவிட வேண்டுமா அல்லவா…? இதையெல்லாம் கோர்ட் படியேறி கேட்க எளிய படைப்பாளர்களுக்கு ஏது சக்தி என்னும் இளக்காரம் அவர்களுக்கு.

அரசாங்கம் இதை உடனடியாக கவனிக்க வேண்டும் ! நீதிமன்றம் சூ மோட்டோவாக இதை எடுத்து விசாரித்து, நல்ல தீர்ப்பு வழங்குமானால் கோடி புண்ணியம் !!

ஆம், 360 கோடியையும் முழுதாக முழுங்கியபடி தப்பாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது SIMCA !  நியாயப்படியும், சட்டப்படியும் அதில் பாதித்தொகையான 180 கோடியை படைப்பாளிகளுக்கு அவர்கள் பிரித்துத் தர வேண்டும்.

உரக்கப் பேசத் தெரிந்தவன் உப்பரிகையில் நிற்கிறான். ஒரிஜினல் படைப்பாளி தெருவில் நிற்கிறான்.

தன் பிள்ளைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கூட கட்ட முடியாத நிலையில் அந்த படைப்பாளி நொந்து போய் தெருவில் நின்றிருக்கும் போது, பக்கத்து கோயிலின் ஒலி பெருக்கியிலிருந்து அவனுடைய பாடல் சத்தமாக ஒலிக்கும். “எனக்கு கேட்கும் இந்தப் பாடல் கடவுளுக்கு கேட்டு விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்..?” மனதுக்குள் எண்ணியபடி  சிரித்துக் கொள்வான்.

சரி, கடன் கேட்கலாம் என்று ஃபோன் செய்தால் எதிர் முனையில் இவன் எழுதிய பாடலே ரிங் டோனாக ஒலிக்கும். கடனளிப்பவரோ,“ஒன்றும் இல்லாத உனக்கு எதை வைத்து கடன் தருவது…?” என்று மறுத்தபடியே ஃபோனை வைத்து விடுவார்.

“ஐயா, நான் ஒன்றுமில்லாதவன் இல்லை ! IPRS – IPL – SIMCA விடம் இருக்கும் அந்த 180 கோடியில் நானும் ஒரு பங்குதாரன்…தயவுசெய்து நம்புங்கள்…” என்று சத்தமில்லாமல் புலம்பிக் கொண்டே தெருவழி நடந்து கொண்டிருக்கிறான் அந்த படைப்பாளி.

வேறு என்னதான் செய்து விட முடியும் இந்த திரு நாட்டில்….!?

– நியோகி