கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: சகுந்தலை! துரை நாகராஜன்

Must read

அத்தியாயம்: 6

பிரபஞ்சத்திலுள்ள அழகையெல்லாம் கொட்டி ஒரு சிலை வடித்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தாள் அவள். ஆடை கட்டியிருக்கத்தான் செய்கிறாள். அவைகளால் அந்த அழகைத்தான் ஒளித்து வைக்க இயலவில்லை. அவள் எறும்புக்கும் தீங்கு நினைக்காத குணவதிதான். என்ன செய்ய, அவள் யௌவனம். பார்ப்பவர் மனதை கொல்லதானே செய்கிறது.

இப்போது துஷ்யந்தன் விழிகள் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. துஷ்யந்தன் மீது அவளுக்கு பரி தாபம் ஏற்பட்டிருக்க வேண்டும். தூணுக்குப் பின்னே மேனியை மறைத்துக் கொள்கிறாள். அதற்குள் துஷ்யந்தனுக்குப் பித்தம் தலைக்கேறிவிட்டிருந்தது.

மாமுனிவர்களைத் தரிசித்தால் பாக்கியம் கிடைக்கும் என்றுதான் வேட்டைக்கு வந்தவன் கண்ணுவ முனிவரைக் காண ஆஸ்ரமத்துக்கு வந்தான். வந்த இடத்திலே தேயாத வெண்ணிலா வின் தரிசனம்.

“தேவலோகம் இனி உனக்குத்தான் துஷ்யந்தா” என்று இந்திரன் சொல்லியிருந்தால் கூட இந்த அளவு ஆனந்தப் பட்டிருக்கமாட்டான். தேன் குடித்த நரியாய் கிறங்கிப்போய் நிற்கிறான். மனைவி லாஷிக்கு இழைக்கிற துரோகமல்லவா இது என்கிற எண்ணம்க கூட அவனுக்குள் ஏற்படவில்லை.

“யார் நீங்கள்?” அவள்தான் கேட்கிறாள். கண்ணுவ முனிவரின் வளர்ப்பு மகள் சகுந்தலை.

எத்தனையோ இசைவாணர்கள் பண் இசைத்துக் கேட்டிருக்கிறான். பொன்னும், பொருளும் இசைக்குப் பரிசாகத் தந்தும் இருக்கிறான். அதெல்லாம் எத்தனை பெரிய அறியாமை என்ற எண்ணம் சகந்தலை குரல் கேட்டதும் மின்னலாய் வந்து போனது.

“நான் பூரு நாட்டவன் துஷ்யந்தன்.”

“மன்னர் மன்னரா…வரவேண்டும்!.

புள்ளிமான் போல துள்ளியோடி மறைந்தவள் ஒரு மணையோடு வருகிறாள். துஷ்யந்தன் அருகில் மணையைப் போட்டவள் மேலாடையால் துடைத்து சுத்தப்படுத்துகிறாள். அவள் ஒவ்வொரு அங்கங் களையும் தாவித்தாவி தழுவியே துஷ்யந்தன் விழிகள் களைப்படைந்தன.

வேட்டைக்கு வந்தவன் மிருகங்களை துரத்தியதால் ஏற்பட்ட களைப்பை கங்கையில் நீராடிப் போக்கி னான். இந்தக் களைப்பை எதனால் போக்கப் போகிறான்?

துஷ்யந்தனின் கண்போன இடத்தை கவனித்த வளுக்கு கோபம் ஏற்படுகிறது. மரியாதை கருதி “அமருங்கள்” என்கிறாள். தூணுக்குப் பின்னே மீண்டும் உடலை மறைத்துக் கொள்கிறாள்.

“நீ யார்?”

“சகுந்தலை. தந்தை வெளியே போயிருக்கிறார்.”

“இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? தந்தை இல்லை. நீ போகலாம் என்பது. நான் உன் தந்தை கண்ணுவ முனிவரைக் காண வந்ததாக உன்னிடம் சொல்லவேயில்லை.”

“பிறகு எதற்காக வந்தீர்கள்? தாகத்திற்கு தண்ணீர் வேண்டுமா?”

“தாகம்தான். இந்தத் தாகம் தண்ணீருக்கு அடங்கக் கூடியதில்லை.”

விஷயம் விளங்கிவிட்டது சகுந்தலைக்கு. இந்த நோயை எந்த மருந்து கொண்டு விரட்டுவது என்றுதான் புரியவில்லை.

“சகுந்தலை இப்போது நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்குப் புரியாமலில்லை. காதல் காரணம் கற்பித்துக் கொண்டு வருவதில்லை சகுந்தலை. அதற்கு தகுதி, தராதரம் பற்றிய அக்கறையும் கிடையாது. பூலோகமே மதிக்கின்ற மன்னவன் உன் முன்னே மண்டியிட்டு நிற்கிறான். உன் காதலை யாசிக்கிறான். ‘முடியாது’ என்ற சொல்லிவிடாதே.”

துஷ்யந்தன் கெஞ்சுவதைப் பார்க்க சகுந்தலைக்குப் பாவமாகத்தான் இருந்தது. தந்தை கண்ணுவ முனிவருக்குத் தெரியாமல் காதலிப்பதா?

“மன்னவரே, என் தந்தை வந்ததும் அவரிடம் பேசுங்கள்.”

“அப்படியானால் உனக்குச் சம்மதம்தானே.”

“என் சம்மதம் என் தந்தையின் சம்மதத்தில் அடங்கியிருக்கிறது.”

“காதலுக்குள் பெற்றவர்கள் நுழைந்துவிட்டால் அது கசப்பாகி விடுகிறது. சகுந்தலை. கந்தர்வ மணம் தான் காதலில் சுகமானது.

“எனக்கு காயத்ரி மந்திரம்தான் தெரியும்.”

“காதல் மந்திரத்தை நான் கற்றுத் தருகிறேன். பிரமம், பிராசாபத்யம், ஆரிடம், தெய்வம், கந்தர்வம், ஆசுரம், இராக்தம், பைசாசம் என்று எட்டுவகை மணம் பின்பற்றப்படுகிறது. இதில் முதன்மையான தும், சொர்க்கத்தின் கதவுகளை தட்டித் திறந்து சுகம் அனுபவிக்கும் சுகந்தமானதும் கந்தர்வ மணம்தான் சகுந்தலை.

கந்தர்வமணம் என்றால் அன்பு ஏற்பட்டுவிட்ட இருவர் பழகித் தழுவி ஒருவராகி ஆனந்த நிலை எட்டுவது. உனக்குப் பசிக்கிறது என்ன செய்வாய்? கனிகளோ, உணவு தானியங்களோ புசிப்பாய் . அப்படித்தானே? பசிக்கிறது தந்தையே .. சாப்பிடலாமா? என்ன சாப்பிடலாம்? எப்படி சாப்பிடலாம்? என்று கேட்டுக் கொண்டா இருப்பாய்?”

“இல்லை” என்று தலையாட்டுகிறாள் சகுந்தலை.

“பசி, வயிற்றில் ஏற்பட்டால் வயிற்றுப்பசி. மனதில் ஏற்பட்டால் காதல் பசி. காதலும், காமமும் ஒன்றன்பின் ஒன்றாக வந்துவிடுகிறது சகுந்தலை. பசியை கவனிக்காமல் பட்டினி கிடந்தால் நோய் ஏற்படுவது போலத்தான். காதலையும், காமத்தையும் பட்டினி போட்டாலும் நோய் ஏற்பட்டு விடும்.

அதன் பெயர் பசலை நோய் சகுந்தலை. உடம்பு மெலிந்து போகும். கைவளைகழன்று விழும். காதல் பசியோடு நீ இப்படி இருந்தால் நாளை உன்தந்தையால்கூட உன்னைஇனம் காண முடியாது.”

“அப்படியா?”

” ஆமாம், எதற்கு தூணுக்குப்பின்னே நிற்கிறாய் சகுந்தலை… இப்படி வா” என்றான்.

பயந்தபடி நடந்து வருகிறாள் சகுந்தலை.

“கந்தர்வ மணம் சுகம் தருகிற மணம் சகுந்தலை. பயத்தை உதறி விடு. பயம் தருவது பைசாசம்தான்.”

இவள் பழைய சகுந்தலை இல்லை. மனதளவிலும், உடலளவிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. கேட்டால், “ஒன்றுமில்லை” என்கிறாள்.

புள்ளிமான் போல துள்ளித் திரிந்தவள் இருந்தால் இருந்த இடம், நின்றால் நின்ற இடம் என்று ஆகிவிட்டாள். தனக்குள் சிரித்துக் கொள்கிறாள். புதிதாய் ஒரு பளபளப்பு முகத்தில் ஏறியிருக்கிறது.

‘அப்படி இருக்குமோ?’ என்ற ஒரு எண்ணம் கண்ணுவ முனிவருக்கு ஏற்படத்தான் செய்தது. ஆண் மகன் வாடையே இல்லாமல் வளரும் மகளுக்கு எப்படி? ஆணொருவன் வந்து போன சுவடும் இல்லையே.

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தந்தை கண்ணுவ முனிவரிடமிருந்து மறைக்க வேண்டும் என்ற எண்ணம் சகுந்தலைக்குள் இல்லை. துஷ்யந்தன். விடை பெற்றுப் போகும்போது “வந்து விடுகிறேன். அதுவரை நாம் கந்தவர்வமணம் செய்த விஷயம் யாருக்கும் தெரியவேண்டாம்.” என்றானே.

“தந்தைக்குக் கூடவா?” என்று அப்போதும் கேட்டாள்.

அவன்தான் “ஆமாம்” என்று சொல்லிவிட்டானே!

துஷ்யந்தனுக்கு செய்து கொடுத்த சத்யத்தைக் காப்பாற்றுவதற்காக அவள் மறைக்கலாம். கர்ப்பத்தை மறைக்க வேண்டும் என்று அவள் வயிற்றுக்கு என்ன தேவை வந்தது?

மூன்று மாதம் சென்றிருக்கும். வயிறு சற்று மேடிட்டுக் காட்டியது. கண்ணுவ முனிவருக்குக் கோபம் உச்சிக்கு ஏறியது.

சேகரித்த சமித்தை யாக சாலைக்கு அருகில் வைத்துவிட்டு மெதுவாக நழுவுகிறாள் சகுந்தலை. இப்போதெல்லாம் கங்கைக்கரையிலே அந்தப் புன்னைமர நிழலில் தான் எப்போதும் வடதிசையைப் பார்த்தபடி காத்திருக்கிறாள்.

அந்த மரத்தடியில்தான் அவர்களுக்கு கந்தர்வ மணம் நடந்தது. கதை கதையாய் பேசினானே.. கைகளில் தூக்கிவைத்து கொஞ்சினானே… அதுவெல்லாம் இனி என்று? கண்களில் ஏக்கம் சொட்ட ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறாள்.

“சகுந்தலை” குரல் கேட்கிறது.

திரும்பி பார்க்கிறாள். கண்ணுவ முனிவர் நிற்கிறார்.

“தந்தையே..”

“சிறுபிள்ளை என்று நினைத்தேனே சகுந்தலை. என்னிடமே மறைத்துவிட்டாயே. யாரவன்?”

“யாரைக் கேட்கிறீர்கள் தந்தையே?”

“என் குழந்தையான உன்னை அம்மா ஆக்கிவிட்டுப் போனானே அவனை.”

“தந்தையே..”

“சொல்..”

சொல்லாமல் விடமாட்டார் என்பதை கண்ணுவரின் கோபமே சொல்லிற்று. வேறு வழியில்லை. அப்போதும், மனசுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் துஷ்யந்தனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறாள்.

“தந்தைக்காக சத்தியத்தை மீறுகிறேன். பெற்றவள் மேகையே காட்டில் எறிந்துவிட்டுப் போய்விட்ட என்னை எடுத்து வளர்த்த தந்தைக்காக மீறுகிறேன். உன் தந்தை விஸ்வாமித்திரன்தான். நானில்லை என்று எந்தச் சூழலிலும் மனதாலும் நினைக்காத ஒப்பற்ற தந்தைக்காக சத்தியத்தையே மறுக்கிறேன். மன்னிப்பீர்கள் அல்லவா?’

“நான் கேட்பது உன் காதில் விழுகிறதா?”

“நீங்கள் அவரை சபிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தால் சொல்லுகிறேன்.”

” உன் இஷ்டப்படியே ஆகட்டும்.”

“துஷ்யந்தர்.”

“என்ன?”

“வருவேன் என்று சொல்லி விட்டுப் போனார். நிச்சயம் வருவார்.”

“ஏமாந்து விட்டாய் மகளே. அவனுக்கு ஏற்கெனவே ஒரு மனைவி இருக்கிறாள். ‘ஜனமே ஜெயன்’ என்ற மகனும் இருக்கின்றான்.”

“தெரியும் தந்தையே.. அவர் என்னிடம் எதையும் மறைக்க வில்லை. உங்கள் பேரனை அரசனாக்குவதாக எனக்கு சத்தியம் செய்து தந்திருக்கிறார்.”

” உன் எண்ணப்படியே நடந்தால் சந்தோஷம் மகளே, காதல் வேகத்தில் ஆண்கள் வீசும் வாக்குறுதிகளை நம்புவது அத்தனை ஆரோக்கியமானதில்லை என்பதை தெரிந்துக்கொள்.”

“அவர் அப்படி இல்லை அப்பா.”

சிரித்துக் கொண்டே கண்ணுவ முனிவர், “உனக்கு துஷ்யந்தனை எத்தனை காலமாகத் தெரியும்?” என்று கேட்டார்.

“ஒரு நாள்தான் …”என்றாள் சகுந்தலை.

“எனக்கு வெகுகாலமாய் பரிச்சயம்..” என்றார் கண்ணுவர்.

வருகிறேன் என்று போன துஷ்யந்தன் வரவேயில்லை. வந்து விடுவான் என்ற நம்பிக்கை மட்டும் சகுந்தலையிடம் அப்படியே ஒரு துளியளவும் குறையாமல் இருந்தது.

இதை பைத்தியநிலை என்று சொல்லாமல் வேறு எந்த வார்த்தையாலும் விளக்க முடியாது.

ஒருநாள் ஏற்பட்ட பந்தத்தை ஆதாரமாகக் கொண்டு பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருப்பது என்றால் அவள் நிலையை வேறு என்ன சொல்லி விளக்க முடியும்?

இந்த வெறித்தனம் மிக்க கண் மூடித்தனமான காதலிலும் ஒரு சுகமிருக்க வேண்டும். இல்லையென்றால் எதற்காக புன்னை மரநிழலுக்கு – துஷ்யந்தனுக்கு கடைசியாய் விடை கொடுத்து அனுப்பிய இந்த இடத்துக்கு – தினமும் வருகிறாள்.?

இன்றும் புன்னை மர நிழலுக்கு வந்து அவன் அமர்ந்திருந்த இடத்தின்மேல் அமர்ந்து கண்மூடி இருக்கிறாள். அவள் உதடுகள் லேசாகத் துடிக்கின்றன. கன்னக் கதுப்பில் நாணமும், குறுநகையும் கலந்து நடக்கின்றன. பூக்களால் தேகத்தை வருடுகிறபோது மயிற்கால்கள் கூச்சத்தால் சிலிர்ப்பது போல் இப்போது அவளுக்கு சிலிர்க்கிறது.

அனுபவிக்கிறாள் அந்தச் சுகத்தைத் தனக்குள்ளாகவே.

அழுதுக் கொண்டே வருகிறான் மகன் பரதன்.

காதல் தவத்திலிருக்கும் சகுந்தலையின் தோளைத் தொட்டு “அம்மா” என்கிறான்.

ஒரு துளி நீர் விழுந்ததும் வாய்மூடிக்கொள்ளும் முத்துச் சிப்பியைப்போல் மகன் பரதனின் ஒரு அழைப்பில் காதல் உணர்வுகள் மூடிக்கொள்ள தாய்மை ஊற்று அவளுக்குள் பிரவாகமெடுக்கிறது.

பதை பதைக்க, “என்ன நடந்தது பரதா? நீ குறி வைத்த வேங்கை தப்பிவிட்டதா?”

“எனக்கு அப்பாவை இப்போ பார்க்க வேண்டும்.”

“ஏன்”

“எனக்கு அப்பாவே கிடையாதாம். குருகுலத்தில உடன் பயில்பவர்கள் சொல்கிறார்கள். அப்பாதான் வரவில்லையே, நாம் போய் பார்த்துவிட்டு வரலாம் அம்மா.”

கண்ணுவ முனிவர் ‘பூரு நாட்டுக்குப் போகலாம்’ என்றபோது கூட “அவர் என்னை வா என்று சொல்லவில்லை. வருவேன் என்றுதான் சொன்னார்” என்று தட்டிக் கழித்தவளின் தீர்மானத்தை மகனின் அழுகை உடைத்துவிட்டது.

தந்தை கண்ணுவ முனிவரிடம் போனாள். விஷயத்தைச் சொன்னதும் அவர் அளவில்லாத ஆனந்தம் அடைந்தார்.

சீடர்கள் சிலரை அழைத்து, அவர்களுடன் சகுந்தலையையும், பரதனையும் பாதுகாப்பாய் அனுப்பி வைத்தார்.

இத்தனை நாள் எப்படித்தான் காத்திருந்தாளோ… ஒவ்வொரு காலடி எடுத்து வைக்கும்போதும் – இப்போதே அவருடைய அரண்மனை வந்துவிடாதா அவர் கைகளுக்குள் அடைக்கலமாகி விடமாட்டோமா என்று மனசு பறக்கிறது. அதற்கு ஈடுகொடுத்து காலும் நடக்கிறது. பரதனும் தந்தையை காணப்போகிற உற்சாகத்தில் கூடவே ஓடுகிறான்.

சீடர்கள் பாடுதான் சிரமமாகிவிட்டது.

தர்பார் மண்டபத்தில் துஷ்யந்தன். படு பந்தாவாக இருக்கிறான்.

அவன் எதிரில் பரதனை இடது கையில் பிடித்தபடி நிற்கிறாள் சகுந்தலை.

கண்டதும், சிம்மாசனத்தை விட்டு ஓடிவந்து ‘கண்ணே முத்தே’ அமுதே என்று கொஞ்சுவான். பிள்ளை பரதனைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவான்.. என்ற சகுந்தலையின் கனவில் இடி விழுந்தது.

துஷ்யந்தன் சகுந்தலையைப் பார்த்து, ‘யார் நீ? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். இப்போது இடி இதயத்தில் விழுந்தது. மகன் பரதனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

“பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருந்தது இதற்காகவா? காதல், கந்தர்வ மணம் என்றெல்லாம் கதை பேசினானே எல்லாம் பொய்யா? பொய்யனின் நினைவையா இதுநாள் வரை சுவாசித்தேன்? இவனை சுமந்த சுகத்தையா தினம் தினம் எண்ணிப் பூரித்தேன்.

“கண்ணுவ முனிவரைக் காணவந்தது – என்னிடம் கந்தர்வ மணம் பற்றிப் பேசியது – எனக்குப் பிறக்கும் பிள்ளையை அரசனாக்குவேண் என்று சத்தியம் செய்தது – எல்லாம் மறந்துவிட்டீர்களா?”

“உன்னைப் பார்த்ததே இல்லை என்கிறேன். என்ன பிதற்றுகிறாய்?”

இனியும் நின்றால் தன்னுடைய தன்மானத்துக்கும், புனிதமான காதலுக்கும் இழுக்கு வரும் என்று நினைத்த சகுந்தலை, மகனோடு அரண்மனையை விட்டு வெளியேறினாள்.

மந்த்ர மலையடிவாரத்தில் குடில் அமைத்து, மகனோடு வாழ்கிறாள் சகுந்தலை.

நடந்தவைகளைக் கேள்விப்பட்டு, கண்ணுவர் வந்து அழைத்தார். “வந்து விடு சகுந்தலை. புஷ்கர தீர்த்தக் கரைக்கே போய்விடலாம்” என்று.

சகுந்தலை தீர்மானமாய் மறுத்து விட்டாள்.

“அந்தத் துஷ்யந்தன் என்னையே யார் என்று கேட்டு விட்டான். அவனுக்கும் எனக்கும் பிறந்த மகனை யாருக்கோ பிறந்ததாக சபையில் கற்பித்து விட்டான். என்பிள்ளை பரதனை அழுக்கென்று சொல்லிவிட்டான். அந்தக் கறையைக் கழுவாமல் நான் இந்த நாட்டை விட்டு வெளியேறமாட்டேன். துஷ்யந்தன் இருக்கும் சிம்மாசனத்தில் என் மகன் பரதனை அமர்த்துவேன். பூரு வம்சம் என்று பேசுகிற குடிமக்களை இனி பரத வம்சம் என்று பேச வைப்«ன். அதன் பிறகு தங்கள் ஆஸ்ரமத்திற்கு வருவேன் தந்தையே” என்றாள்.

சகுந்தலையை துஷ்யந்தன் ஏமாற்றிவிட்ட செய்தி, தேவலோகத்திலுள்ள மேகைக்கு எட்டியது.

இத்தனை நாள் இல்லாத பிள்ளைப் பாசம் அவளுக்கு ஏற்பட்டது.

மேனகை பூலோகத்துக்கு வந்தாள். துஷ்யந்தனை தனிமையில் சந்தித்தாள். மகள் சகுந்தலையின் முகத்தைப் பார்க்கும் சக்தி அவளுக்கு இல்லை. மந்த்ர மலை அடிவாரத்தில் குடில் அமைத்து வாழ்ந்து வரும் – சகுந்தலையைப் பார்க்காமலேயே தேவலோகத்துக்கு சென்று விட்டாள்.

மேனகைக்கும் துஷ்யந்தனுக்கும் இடையில் என்ன பேச்சு வார்த்தை நடந்ததோ , துஷ்யந்தன் நேரில் வந்து சகுந்தலையும் , பரதனையும் அரண்மனைக்கு அழைத்துப் போனான்.

இந்த மனமாற்றத்துக்கு என்ன காரணம் என்று சகுந்தலையும் கேட்கவில்லை. துஷ்யந்தனும் சொல்லவில்லை. நாட்கள் ஓடின.

அன்று பரதனுக்கு பட்டாபிஷேகம், நங்கையர் நாட்டியம் ஆடிக் கொண்டிருக்கின்றனர். தேவராகம் முழங்கிற்று. நகரெல்லாம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

பரதன் தலையிலே கிரீடத்தை சூட்டுகிறான் துஷ்யந்தன். மேல் மாடத்திலிருந்தபடியே இந்தக் காட்சியைப் பார்க்கிறாள் சகுந்தலை. அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் சுரந்தது.

எழுந்தாள். வேகமாய்க் கீழே இறங்கி, அரண்மனையை விட்டு வெளியேறி நடந்தாள் – புஷ்கர தீர்த்தக் கரையை நோக்கி.

“பரதனுக்கு பட்டாபிஷேகம் நடத்தினால் காமப் பசியாற்றுவதாய் சொன்னாயே சகுந்தலை… வா பசியாறலாம்” என்று அழைக்க சகுந்தலையை தேடுவான் துஷ்யந்தன்…

தேடட்டும்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article