கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: அம்பை! துரை நாகராஜன்

Must read

அத்தியாயம்: 7

அம்பை

அஸ்தினாபுரமே உறங்குகிறது.  அந்தப்புரத்தை காவல் காக்கும் அலிகளும் தூங்கி விட்டனர்.

இதற்காகவே காத்திருந்ததுபோல் படுக்கையிலிருந்து எழுகிறாள் அம்பை.

நாலைந்து தீப்பந்தங்கள் காற்றிலே நடித்துக் கொண்டிருக்கின்றன.

“அம்பிகை… அம்பாலிகை..”

காற்றுக்கும் கேட்காத குரலில் தங்கைகள் இருவரையும் அழைக்கிறாள்.

“அக்கா..”

“இங்கிருந்து தப்பிவிடலாம்..”

“தப்பித்துப் போய்…”

“ஏன், உங்களுக்கு வரவிருப்பமில்லையா?”

“நம்மை பீஷ்மர் கடத்தி வந்ததை உலகமே அறியும்.  அப்படியிருக்க நம்மை மணப்பதற்கு எந்த நாட்டு மன்னனும் இனி  துணியப்போவதில்லை…”

“நான் போகத்தான் போகிறேன்…”

“எங்கு போவாய்?”

“என் காதலன் நாட்டுக்கு..”

“நீ எங்கே என்று பீஷ்மர் கேட்டால்?”

“சாலுவ நாட்டுக்கு வாழப்போய்விட்டேன்” என்றே சொல்லுங்கள்.

சாலுவ மன்னன் பிரமதத்தின் கண்கள் இரண்டும்சூரியக் குஞ்சு போல் சிவந்திருக்கின்றன. எதை மறக்கக் குடிக்கிறானோ அந்த நினைப்பே அவனுக்குள் விஸ்வரூபம் எடுக்கிறது.

எத்தனை பெரிய அவமானம் அது.  கண் எதிரிலேயே காதலியை, தலையும் தாடியும் நரைத்த கிழவன் கடத்திக் கொண்டு போகிறான். கையாலாகாதவன் போல் பார்த்துக் கொண்டு நிற்கத்தானே முடிந்தது.

அறுபத்து மூன்று தேசத்து அரசர்களும் அங்கிருக்க அத்தனை பேரையும் பகைத்துக் கொண்டு காசிராஜனின் மகள்கள் மூவரையும் கடத்திக் கொண்டு சென்றான்.

‘எந்தப் பெண்ணை எவன் விரும்புகிறானோ அவன் என்னோடு மோதலாம்’ என்று நெஞ்சுக்கு நேராகவே சவால் விட்டார் பீஷ்மர்.

எவனுக்கும் துணிச்சலில்லை.

சாலுவன் மட்டும் கதையை தூக்கிக் கொண்டு, பீஷ்மர் முன் பாய்ந்தான்.  காதல் பிடரிபிடித்துத் தள்ளியதுதான் காரணம்.

‘சாலுவனைக் கொல்லாமல் விட்டதை பீஷ்மரின் பெருந்தன்மை என்றுதான் சொல்ல வேண்டும்.  பிரம்மச்சர்யம் கடைபிடிக்கும் பீஷ்மர் , பெண்ணுக்காக கொலை செய்தான் என்கிற அவப்பெயரை சம்பாதிக்க வேண்டாம்’ என்று நினைத்தது கூட காரணமாக இருக்கலாம்.

சுயம்வர மண்டபத்தை போர்க்களமாக்கி, பீஷ்மர் மூன்று  பேரைத் தூக்கிவரக் காரணமாக இருந்ததும் அவர் மேற்கொள்ளும் அந்த விரதம்தான்.

முத்துக்களாலும், மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிற சுயம்வர மண்டபத்தில், அரசர்கள் எல்லோரும் மனதில் ஆசையை வளர்த்துக் கொண்டு காத்திருக்கின்றனர்.

அரசவை குரு, “முகூர்த்த நேரம் பிறந்துவிட்டது.  உப்பரிகையில் இருக்கும் இளவரசிகளை சுயவரம் மண்டபத்துக்கு அழைத்து வாருங்கள்” என்கிறார்.

அம்பை முன்னால் வர, அம்பிகையும், அம்பாலிகையும் கைகளில் மாலையோடு பின் தொடர்கின்றனர்.

மணக்கோலத்திலிருக்கும்  மூவரையும் பார்த்த மன்னர்களுக்குள் ‘மூவரும் தனக்கே மாலையிட வேண்டும்’ என்ற பேராசை வளர்ந்தது.  எல்லோருமே நாகதாளிப்பழத்தில் செய்யப்பட்ட தாதுரா லேகியம் சாப்பிட்டதைப் போல் போதையுடன் இருக்கின்றனர்.

அப்போதுதான் பீஷ்மர் உள்ளே நுழைகிறார்.  பெட்டையைப் புணர்ந்த சேவல், இருபுறம் திரும்பித் திரும்பி பார்த்தவாறே நெஞ்சை நிமிர்த்தி நடப்பதைப் போல் வருகிறார்.

அதோ பீஷ்மர்.

எல்லா திசையிலிருந்தும் குரல் கேட்கிறது.  ஒருவன் சொல்கிறான், “சுத்தமான கிழட்டுப் பிரம்மச்சாரிக்கு சுயம்வர மண்டபத்தில் என்ன வேலை?”

அடுத்த ஊர் சேவலைப் பார்த்த உள்ளூர் சேவலைப் போல் சிலிர்த்தார் பீஷ்மர்.

“நான் கிழவன்தான், துணிச்சல் இருப்பவன் தடுத்துப் பார்க்கட்டும். ” என்றார்.  மூன்று பெண்களையும் இழுத்துக் கொண்டு போய் தேரில் ஏற்றினார்.  தேர் பறந்தது.  துரத்திப்போய் போரிட்ட பிரமதத்தன் தோற்றான்.  அந்தத் தோல்வியை மறக்கத்தான் இதோ குடித்துக் கொண்டிருக்கிறான்.

“நெருப்பை அணைப்பதற்கு யாராவது அதில் நெய் ஊற்றுவார்களா? நான்கு தினங்களாய் குடித்துக் கொண்டேதான் இருக்கிறீர்களாமே.  மதுக்கோப்பையை இப்படிக் கொடுங்கள்…”

“அம்பை…” அத்தனை போதையிலும் அவன் உதட்டிலிருந்து வார்த்தை சுருதி பிசகாமல் வருகிறது.

“நான்தான் .  வந்துவிட்டேன்.  இறைவன் கூட இனி நம்மை பிரிக்க முடியாது.”

அம்பை சொன்னதைக் கேட்டு பிரமதத்தன் சிரித்தான்.  அந்தச் சிரிப்பிலே விஷம் இருந்ததைக¢ கண்ட அம்பை துணுக்குற்றாள்.

“என்ன ஆயிற்று சாலுவரே… தலைக்கு எலுமிச்சை சாறு தேய்த்து விடட்டுமா?”

“தொடாதே …அங்கேயே நில்..”

‘ஏன்’ என்ற கேள்வியோடு நின்ற அம்பை, “யாரங்கே” என்றாள்.

ஒற்றன் ஒருவன் ஓடி வருகிறான்.  இவன்தான் இருவரின் காதலுக்குமிடையில் தூதுவனாகவும் செயல்பட்டவன்.

“சொல்லுங்கள் அரசியாரே..”

“ஓடிச்சென்று ஒரு குவளை எலுமிச்சைச்சாறு கொண்டு வா, பருகத் தருவதற்கு தயிரும் எடுத்துக் கொள்.”

“உத்தரவு அரசியாரே..:

திரும்ப எத்தனித்த சேவகன், “அம்பை, என் சேவகனுக்கு உத்தரவிட நீ யார்?” என்ற பிரமதத்தனின் கேள்வியில் அப்படியே நின்று விட்டாள்.

இப்படியொரு கேள்வியை அம்பை எதிர்பார்க்கவில்லை.  அமாவாசை நாளெல்லாம் காசிநாட்டு அந்தப் புரத்திலே ரகசியமாய் சந்தித்து ஒவ்வொரு சந்திப்பின் போதும் தவறாமல், “அம்பை, சாலுவன் என்றும் உன் அழகுக்கு அடிமை சாலுவ நாடு உன்னுடையது” என்று பிதற்றுவானேன்! ஏன் இப்படி மாறினான்? அவனை மாற்றியது எது?

அஸ்தினாபுரத்திலிருந்து வந்ததில் சற்று கறுத்து களைத்திருக்கிறாள்.  இதனால் துலக்காத பித்தளைப் பாத்திரம்போல் அழகு சற்று மங்கலாகத் தெரியலாம்.  இது காரணமாக இருக்க முடியுமா?

காரணம் எதுவாக இருந்தாலும் சாலுவன் இப்படி கேட்டிருக்கக்கூடாது அம்பைக்கு மனசு ஆறவில்லை.

“என்னையா யார் என்று கேட்கிறீர்கள். என்னையா?”

“ஆமாம், என்றவன், ஒற்றனைப் பார்த்து “நீ ஏன் இன்னும் நின்று கொண்டிருக்கிறாய்” என்றான்.

“உங்களைக் காதலித்ததைத் தவிர ஒரு பாவமும் அறியாத நான் உங்களுக்கு அன்னியமாகி விட்டது எதற்காக என்று அறியலாமா?”

“நிஜமாகவே உனக்குத் தெரியவில்லை? சாலுவன் உன் ஆசை நாயகனிடம் தோற்றிருக்கலாம்.  அவன் மிச்சம் வைத்த எச்சிலைச் சுவைக்கும் அளவுக்குக் கேவலமாகிவிடவில்லை..”

“போதையில் என்னபேசுகிறோம் என்று புரிந்துதான் பேசுகிறீர்களா?”

“சாலுவன் நிதானம் தவறியதாய் சரித்திரமே இல்லை.  இவன் போட்ட கணக்கும் தப்பானதில்லை.  நான்ஏமாற்றப்பட்டது உன் விஷயத்தில் மட்டுந்தான்.”

“பீஷ்மர் சுத்தமான வீரர்.  அவரை சந்தேகிக்காதீர்கள்.  அவர் எங்களைக் கடத்திப் போனது தம்பி விசித்திர வீர்யனுக்கு மணமுடித்து வைக்கத்தான். நான் தப்பி வந்துவிட்டேன்..”

“என்னை காதலித்தது நிஜமென்கிறாய்..”

“அதனால்தான் இன்னும் உங்கள் முன்னால் யாசகியைப்போல் நிற்கிறேன்.”

“நீ செத்துப் போயிருக்கலாம் அம்பை.  என் காதலி மாற்றான் கை மேனியில் பட்டதைப் பொறுக்காமல் மாண்டுவிட்ட வீரமகள் என்று மார்த்தட்டியிருப்பேன்.  அநத் வாய்ப்பைத் தராமல் செய்து விட்டாயே.”

“நான் முழுசாக வந்ததில் உமக்குப் பெருமை இல்லையா? சந்தோஷம் ஏற்படவில்லையா?”

“நீ முழுசாகத்தான் வந்திருக்கிறாய் என்பதற்கு என்ன ஆதாரம்?”

“நம்பிக்கையைவிட பெரிய ஆதாரம் எதுவும் இல்லை.  சாலுவரே.  நான் உம்மைக் காதலித்ததை தப்பு என்று சொல்லவில்லை.  அஸ்தினாபுரத்திலிருந்து வந்திருக்கக்கூடாது..”

” இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை.  தேரிலே விட்டு வரச்சொல்லட்டுமா?”

அதுவரை அம்பைக்குள் அடங்கியிருந்த பெண்மை ஆவேசம் கொண்டது.

“சிங்கம் நரியிடம் உதவி கேட்டதாய் சரித்திரம் இல்லை சாலுவா, என்னைப் பொறுத்தவரை இந்த கணம் முதல் நீ செத்துவிட்டாய்” என்றவள் நிதானமாய் அரண்மனை விட்டு வெளியேறி நடந்தாள்.

அஸ்தினாபுர அரண்மனை அந்தப்புரத்துக்கு வெகு அருகில்தான் உள்ளது அந்தச் சோலை. பீஷ்மருக்கென்றே உருவாக்கப்பட்டது.  மான் கூட்டங்கள் அலைகின்றன.  மாவும், பலாவும் காய்த்துத் தொங்குகிறது.

சோலையை ஒட்டினாற்போல் கங்கைநதி ஓடுகிறது.  கங்கை பீஷ்மனைப் பெற்றவள் அல்லவா.  தாயைப் பார்க்கத் தோன்றினாலும் மனம் சொல்ல முடியாத குழப்பத்தில் குமைந்தாலும், இன்றுபோல் அதிக ஆனந்தத்தில் திளைத்தாலும் இந்தச் சோலைக்கு வருவார் பீஷ்மர்.

தம்பி  விசித்திர வீர்யனுக்கு அம்பிகை, அம்பாலிகை இருவரையும் திருமணம் முடித்து வைத்து விட்டார்.  கடமையை நிறைவேற்றிய பெருமையில் தென்றலின் குளுமையை அனுபவித்தவாறே சோலையில் உலாத்திக் கொண்டிருக்கிறார்.

ஆண்களே வரத் தயங்கும் இந்தச் சோலைக்குள் ஒரு பெண் நுழைவது எத்தனை பெரிய அபச்சாரம்! பீஷ்மர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த அபச்சாரம் நடந்தது.  தடுக்க முடியவில்லை.

அந்தப் பெண் அருகில் வந்த பிறகுதான் யார் என்று அடையாளம் தெரிந்தது.

அம்பை.

மரியாதை கருதி கூட பீஷ்மர் அம்பையை ‘வா’ என்று அழைக்கவில்லை.  அம்பை, பீஷ்மரிடம் மரியாதையை எதிர்பார்த்து வந்தால்தானே அதைப் பற்றிக் கவலைப்பட.

“இப்படி உட்கார்ந்து பேசலாமா பீஷ்மரே..”

“என்ன பேசவேண்டும்? எதுவானாலும் நாளை அரண் மனையில் பேசிக் கொள்ளலாம்.  உன் சகோதரரி களுக்குத் திருமணமாகிவிட்டதை.  அறிவாயல்லவா.  உன் சாலுவன் நலம்தானே?”

பீஷ்மர் பதற்றத்துடன் கேட்கிறார்.

“ஏன் பதறுகிறீர் பிதாமகரே?”

“முதலில் இங்கிருந்து போய்விடு.”

“அது எப்படி முடியும்.  நீங்கள் இருக்கின்ற இடம்தான் இனி நான் வசிக்கும் உலகம்.  உமக்கு வயதாகி விட்டா லும் உடம்பு வலுவாகத்தான் இருக்கிறது.  ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொள்ளட்டுமா?”

அம்பை இப்படிக் கேட்டதும் பீஷ்மர் இரண்டடி பின்னால் நகர்ந்தார்.

“நான் பூனையும் இல்லை.  நீர் எலியும் அல்ல.  பிறகு ஏன் என்னைக் கண்டதும் உடம்பு இப்படி நடுங்குகிறது  பீஷ்மரே?”

“இந்தக் கணமே இங்கிருந்து போகப் போகிறாயா இல்லையா?”

“போகாவிட்டால் என்ன செய்துவிடுவீர்களாம்? வன்னி மரத்தடியிலே உள்ள நிழலில் கிடத்தி புரட்டி எடுத்துவிடுவீரா?”

“பெண் என்பதை மறந்து பேசாதே அம்பை..”

“நான் பெண் என்பது பெருமகனாருக்கு இப்போது தான் நினைவு வந்ததா? சுயம்வர மண்டபத்திலி ருந்து மாட்டைப்போல் எங்களை ஓட்டிக் கொண்டு வரும்போது இந்த நினைப்பு எங்கே போயிற்று?  என் உடல், பொருள், ஆவி அத்தனையும் சாலுவனுக்கே ஒப்படைத்துவிட்டேன்.  விட்டு விடுங்கள் என்று எத்தனை தூரம் கெஞ்சினேன்.  எங்கள் மூன்று பேருடைய கதறலைவிட, எங்கள் வாழ்க்கை யை சபையோர் முடி நரைத்த கிழவன் என்று கேலிபேசியதுதானே பெரிதாயிற்று,  உங்கள் வீரத்தை காட்ட எங்கள் வாழ்க்கை தானா கிடைத்தது?”

“உன் காதலை நான் மதிக்கவில்லை என்று யார் சொன்னது? நீ அஸ்தினாபுரத்தின் அந்தப்புரத்தி லிருந்து தப்பிப் போகும்போது நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.  ஏன் தடுக்கவில்லை தெரியுமா.. நீ சாலுவன் மேல் காதல் கொண்டிருந்தாய்..”

“உங்களுக்குள்ளேயும் பெண்களின் மனதை மதிக்கும் பண்பு இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்கிறேன்.  நான் வந்த வேலை சுலபமாய் முடியப்போகிறது.”

“என்ன அது?”

“சொல்லத்தானே வந்திருக்கிறேன்.”

“நான் என்ன செய்யவேண்டும்? உன் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்த சாலுவனிடம்  மீண்டும் சேர்த்து வைக்கவா? சாலுவ தேசத்தில் என்ன நடந்தது என்பதையும் அறிவேன்..”

“நான் வேறு முடிவுக்கு வந்து விட்டேன்…”

“எதுவானாலும் சீக்கிரம் சொல்லி விட்டு இங்கிருந்து போய்விடு.  வானத்தில் நிலவு வந்துவிட்டது.  பிறர் பார்த்தால் என் பிரம்மச்சர்யத்துக்கு களங்கம் ஏற்பட்டுவிடும்.”

“அப்போது கூட என் கற்புக்குக் களங்கம் வருமே என்ற கவலை உமக்கு இல்லை.  அதனால் என்…என் கற்புக்கு  இனி காவலரே நீர்தானே..”

“என்ன பிலம்புகிறாய்?”

“புரியும்படியாகவே சொல்கிறேன்.  நீர் எந்த உரிமையில் என்னை சிறை எடுத்து வந்தீரோ.. அதே உரிமையில் கேட்கிறேன்.  நீர் என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும்..”

“அது முடியாது.  சபதம் செய்திருக்கிறேன்.”

“பிறகு ஏன் என்னை சிறை எடுத்தீர்?”

” அது என் தம்பிக்காக..”

“அவன் என்ன பேடியா?”

“வார்த்தையில் மரியாதை இருக்கட்டும் அம்பை.  விசித்திர வீர்யன் இந்த குரு நாட்டுக்கு மன்னன்…”

“பெண்மையைப் போற்றத் தெரியாதவன்தானே.  இல்லையென்றால் அடிமையை அனுப்பி ஆசைப்பட்ட பெண்ணை தூக்கிவரச் சொய்வானா?”

“யாரை அடிமை என்கிறாய்?”

“உம்மைத்தான்.  என் தந்தை ஓலை அனுப்பியது மன்னன் விசித்திர வீர்யனுக்கு.  வந்தவன் அவன் ஆணைக்கு அடிபணியும் ஒருவன்.  அரச ஆணைக்குப் படிபவன் அடிமைதானே..”

“ஏன், தளபதியாய் இருக்கலாமே..”

“அது பதவியின் பெயர்.  அடிப்படையில் அடிமைதானே..”

“அரசன் மகள் அடிமையை விரும்புவாளா?”

“ஆண்மையில்லாத அரசனை மணந்து கங்கை நதியை நம்பி வாழ்வதைக் காட்டிலும், அடிமையை மணந்து ஆனந்த வாழ்வு வாழலாம் அல்லவா.  நான் இரண்டாவதையே விரும்புகிறேன்.”

“அம்பிகையும், அம்பாலிகையும் சந்தோஷமாக இல்லை என்கிறாயா?”

“கணவனை இழந்த சத்தியவதி சாப்பிடும் பத்தியச் சாப்பாட்டை இருவரும் சாப்பிடுகிறார்களாமே.. இதற்கு என்ன அர்த்தம்?”

பீஷ்மரால் பதில் சொல்ல முடியவில்லை.  மௌனமாக நின்றார்.

“சொல்லுங்கள் பிதாமகரே.. எப்போது நம் திருமணம்?”

“அது நடக்காத கதை அம்பை.  நான் பெரிதும் மதிக்கிற என் தாய் கங்கா தேவி மீது சத்தியம்..”

“அப்படியானால் என் எதிர்காலம்?”

“உன் இஷ்டப்படி  நீயே அமைத்துக் கொள்.  சாலுவ நாட்டுக்கு நீ காதலனைத் தேடி ஓடாமல் இருந்திருந்தால், என் தம்பி விசித்ர வீர்யனுக்கு மனைவியாக்கியிருப்பேன்.  அந்த வாய்ப்பை நீயாகத்தான் காதல் மோகத்தில் தொலைத்தாய்.  இனி புலம்புவதில் அர்த்தமில்லை.  அம்பை..”

“இத்தனைக்கும் காரணம் நீர் என்பதை மறந்துவிட்டுப் பேசுகிறீர்…”

“அம்பை நீ மரியாதை தெரிந்தவள்.  இங்கிருந்து போய்விடு உங்கள் மூவரின் அழகைக் கேள்விப் பட்டு தம்பி விரும்பினான்.  அவன் விருப்பத்தை நிறைவேற்றினேன்.  அரச தர்மப்படி இது என் கடமை..”

“பாதிக்கப்பட்டவன் பகைவனைப் பழிவாங்காமல் ஒயமாட்டான் என்பதையும் அறிந்திருப்பீரோ..”

“யாரைப் பழிவாங்கப் போகிறாய்..?

“உம்மை..”

இதைக் கேட்ட பீஷ்மர் வாய்விட்டே சிரித்தார்.  “அகல் விளக்கு சூரியனையே எரித்துவிடுவதாய் கொக்கரிக்கிறது.  நல் வேடிக்கை!” என்று அம்பைக்கு கேட்கும்படியே சொன்னார்.

“இந்த பிரபஞ்சத்தை எரித்து முடிக்க ஒரு சின்ன தீப்பொறி போதும் பீஷ்மரே”என்றாள். திரும்பி நடந்தாள்.

பீஷ்மரை சந்திக்க வரும்போது முதலிரவு அறைக்குள் பால் சொம்போடு நுழையும் மணப்பெண் ணின் நளினத்தோடு தயங்கித் தயங்கி வந்தாள்.  அப்போது அவள் முகத்தில் பாலாடை மாதிரி மெல்லிய நாணம் கூடப் படர்ந்திருந்தது.

இப்போது மதம் பிடித்த யானையைப் போல் செல்கிறாள்.  சிங்கத்தின் நடையிலே இருக்கிற தீர்க்கம் அம்பையிடமும் காணப்படுகிறது.  பெண்மையும், மென்மையும் இல்லாத அம்பையைப் பார்க்கிறார் பீஷ்மர்.

இப்போது அவர் ஆனந்தமாய் இல்லை.

குருஷேத்திரத்தில் பத்தாம் நாள் யுத்தம்.  போர் பாதியிலேயே நிறுத்தப்படுகிறது.

பீஷ்மர் வீழ்ந்துவிட்டார்.  பிதாமகன் சரிந்துவிட்டார்.

பெருந்தலைகள் பீஷ்மரை நோக்கி ஓடிவருகின்றன.

“பரசுராமரையே தோற்கடித்த பீஷ்மரை  வீழ்த்தினானா…யாரவன்?” துரோணர் கேட்கிறார்.

“சிகண்டி!” என்கிறான் கண்ணன் புன்னகைத்தபடியே.

இவனா கொன்றது.  நம்ப முடியாமல் சிகண்டியைப் பார்க்கிறது கூட்டம்.

‘இந்த அலிக்குள் பீஷ்மரை வீழ்த்தும் வீரம் புதைந்து கிடந்ததா? யாரை நம்பச் சொல்கிறாய் கிருஷ்ணா? எல்லாம் உன் மாய லீலைதானே..?’ என்பதுபோல் பார்க்கிறார் கிருபர்.

“கிருபரே, காசிராஜன் மகள் மூவரை பீஷ்மர் சிறையெடுத்ததும், அம்பையின் வாழ்வு சீரழிக்கப்பட்ட தும் நினைவிருக்கிறதா?அந்த அம்பைதான் இந்த சிகண்டி..!”

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article