பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில்,  நீதிமன்ற அறிவுரையை மீறி இஸ்லாமிய மாணவிகள்  ஹிஜாப் அணிந்து வந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. உயர்நீதி மன்றம் வழக்கு விசாரண முடியும்வரை மத அடையாளங்களை மாணவ மாணவிகள் வெளிப்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டுள்ள நிலையில், அதை மீறி ஹிஜாப் அணிந்து வந்துள்ளது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு வரும் வரை பொதுமக்கள், மாணாக்கர்கள் அமைதி காக்கும்படி முதல்வர் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடக மாநில அரசு, கல்வி நிலையங்களில் மாணாக்கர்களிடையே சாதி, மத வேறுபாடுகளை தவிர்க்க மதஅடையாள சின்னங்களுடன் கல்வி நிலையங்களுக்கு வர தடை விதித்துள்ளது. இதன்படி, கர்நாக  மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுராவில் இருக்கும் பியூ கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது .கல்லூரியின் இந்த தடைக்கு எதிராக நம் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.  இதை அடுத்து இந்து மாணவர்களும் முஸ்லிம் மாணவிகளுக்கு போட்டியாக காவி துண்டு மற்றும் தலைப்பாகை அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.   இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதனால் கர்நாடகத்தில் மூன்று நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது .  இந்த விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம், ஹிஜாப், காவி துண்டு அணிந்து பள்ளிக்கு வருவதற்கு தடைவிதித்து இடைக்கால தீர்ப்பளித்தது.

இதையடுத்து மூடப்பட்ட பள்ளிகள் நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.   உயர் நீதிமன்றம்  மத அடையாள ஆடைகளை அணிய இடைக்கால தடை விதித்து இருப்பதால் அந்த மாணவிகளை ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கவில்லை.  ஹிஜாப்பை கழற்றினால்  பள்ளிக்குள் செல்லலாம் என்று தெரிவித்தனர்.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து  வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று சில இடங்களில் சில மாணவிகள் மட்டுமே ஹிஜாப்பை கழற்றிவிட்டு பள்ளிக்குச் சென்றார்கள். ஆனால், சில பகுதிகளில் ஆசிரியர்கள் சொன்னதை கேட்காமல், படிப்பு தேர்வை விடவும் ஹிஜாப்தான் முக்கியம் என்று பல இடங்களில்  மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பல இடங்களில் மாணவிகளுடன் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சில மாணவிகள் வீடுகளுக்கு திரும்பி சென்றிருக்கிறார்கள்.

 சிக்மளூரு மாவட்டத்தில் இந்தாவரா அரசு பள்ளிக்கு முஸ்லீம் மாணவிகள் 153 பேர் ஹிஜாப் அணிந்து வந்தனர்.  ஆசிரியர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.   ஹிஜாப்பை கழற்றிவிட்டு பள்ளிக்கு செல்லும் படி ஆசிரியர்கள் தெரிவித்ததையடுத்து அதை ஏற்றுக்கொள்ளாத மாணவிகள் பள்ளி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.   அவர்களில் 23 பேர் எஸ்எஸ்எல்சி மாணவிகள்.  தற்போது தேர்வு நடப்பதால் பள்ளி ஆசிரியர்கள் அறிவுறுத்தினர்.   ஆனாலும் மாணவிகள் எங்களுக்கு தேர்வு வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்து  விட்டனர். இதனால் அங்கிருந்த இந்து மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்த காவி துண்டை அணிய முயற்சி செய்தார்கள்.  அவர்களிடம் இருந்த துண்டை  ஆசிரியர்கள் பறித்தனர்.  இதனால் அப்பகுதியில் பதட்டம் உருவானது. இதனால், பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஹிஜாப் பிரச்சினையால் கர்நாடகா மாநிலத்தில் மூடப்பட்டிருந்த கல்லூரிகள் ஏழு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று  திறக்கப்பட்டுள்ளன. மைசூரு, உடுப்பி மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகல்கோட், பெங்களூர், சிக்கபல்லாபுரா, கடக், ஷிமோகா, தும்கூர், மைசூர், உடுப்பி மற்றும் தட்சிண கன்னடா ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் பிரச்சினை கல்லூரிகளிலும் எதிரொலிக்காமல் இருக்க கர்நாடக அரசும் மாவட்ட நிர்வாகிகளும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இருந்தாலும் சில பகுதிகளில் இஸ்லாமிய மாணவிகள் நீதிமன்ற உத்தரவை மிறி ஹிஜாப் அணிந்து சென்றதாக கூறப்படுகிறது. ஷிவமொக்கா கல்லூரியில் இருந்து 30 மாணவர்கள் ஹிஜாபை கழற்ற மறுத்து கல்லூரியை விட்டு வெளியேறினர்.  இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக கர்நாடக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த முதல்வர் பசவப்பா பொம்மை,  கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன. நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். இறுதி உத்தரவு வரும் வரை காத்திருப்போம். கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும். அனைத்து பிரச்னைகளும் தீரும். குழந்தைகளுக்கு கல்வி முக்கியம். நல்லது. அதற்கான சூழலை உருவாக்க வேண்டும்,” என கூறியுள்ளார்.