பெங்களூரு

தாய் விபத்தில் சிக்கியதால் சாலை பள்ளங்களைச் சரி செய்யக் கர்நாடக சிறுமி ஒருவர் தனது சேமிப்பை முதல்வருக்கு அளித்துள்ளார்.

பெங்களூருவில் சாலைகளில் பல பள்ளங்கள் உள்ளன. இவை சரி செய்யப்படாததால் பல விபத்துக்கள் நேருகின்றன.   சமீபத்தில் ஆட்டோ ரிக்‌ஷாவில் சென்று கொண்டிருந்த ஒரு 65 வயது முதியவர் பள்ளத்தில் ஆட்டோ சிக்கி ஏற்பட்ட விபத்தில் சிக்கி தலை குப்புற விழுந்ததால் உயிர் இழந்துள்ளார்.   இது பெங்களூரு மக்களிடையே கடும் அதிர்வை ஏற்படுத்தியது.

குறிப்பாக இந்த நிகழ்வினால் அரசுப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் தவனி என்னும் 7 வயது சிறுமி மிகவும் துயர் அடைந்துள்ளார்.  சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு சாலைப் பள்ளத்தால் ஏற்பட்ட விபத்தில் அடிபட்ட இவரது தாய்க்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு கால் ஊனமாகி உள்ளது.  த்வனியின் பெற்றோர் தும்கூரில் இருந்து நகருக்கு வந்து கட்டுமானப் பணியில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இதையடுத்து தவனி தனது தாயாரான ரேகா மற்றும் தந்தை நவீன்குமாரிடம் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இனி சாலைப் பள்ளங்களை அடைக்கலாம் என தெரிவித்துள்ளார்.  அவரது தாயார் ஊரெங்கும் ஏராளமான பள்ளங்கள் உள்ளதால் தம்மால் அது முடியாது எனவும் அதை மாநில முதல்வர் தான் முன்னின்று நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தவனிக்கு நீர்ச்சத்து குறைவாக உள்ளதால் அவரை தண்ணீர் குடிக்க ஊக்குவிக்க அவருக்குத் தினசரி அவரது பெற்றோர்கள் சாக்லேட் வாங்க ஒரு கிளாஸ் நீர் பருகும் போது ரூ.1 அளிப்பது வழக்கமாகும்.   இதனால் அவர் நான்கு நாட்களில் தினசரி 10 கிளாஸ் நீர் பருகி ரூ.40 சேர்த்துள்ளார்.  அதை அவர் சாலைப் பள்ளங்களைச் சரி செய்ய முதல்வருக்கு அளிக்க முன்வந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தவனி அந்த வீடியோவில் முதல்வர் பசவராஜ் பொம்மையிடம், “தாத்தா, சாலைப் பள்ளங்களால் விபத்து ஏற்பட்டு பலரும் உயிர் இழக்கின்றனர்.  அல்லது ஊனமாகின்றனர்.  இதனால் ஆதரவிழக்கும் குடும்பங்களுக்கு நாம் என்ன செய்ய முடியும்?   என்னால் முடிந்த தொகையான ரூ.40ஐ நான் இந்த பணிக்கு அளிக்கிறேன்.  உடனடியாக இந்த சாலைப் பள்ளங்களைச் சரி செய்யுங்கள் தாத்தா” எனக் கூறி உள்ளது பலரது உள்ளத்தை உருக்கி உள்ளது.