மும்பை

பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் பாட்டில் பாஜகவினரை புலனாய்வு துறைகள் எதுவும் செய்யாது என பொது மேடையில் தெரிவித்துள்ளார்.

பாஜகவினரை அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற புலனாய்வுத் துறைகள் எவ்வித விசாரணையிலும் ஈடுபடுத்துவதில்லை என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன..    மேலும் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த மட்டுமே இந்த அமைப்புக்கள் பயன்படுத்தப்படுவதாகவும் இவை அனைத்தும் ஆளும் பாஜகவுக்கு மிகவும் உதவி வருவதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2019ஆம் அண்டு காங்கிரஸில் இருந்த ஹர்ஷ்வர்தன் பாட்டில் பாஜகவில் இணைந்தார்.   அவர் இந்த மாத தொடக்கத்தில் ஒரு அனைத்துக் கட்சி நிகழ்வில் கலந்து கொண்டார்.    அந்த நிகழ்வில் அவர், “பாஜகவில் நாங்கள் ஏன் இணைந்தோம் என எனது அருகில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.    அதற்கான காரணத்தை நான் அவரது தலைவரைக் கேட்க சொன்னேன்.

என்னிடம் இப்போது எந்த ஒரு புலனாய்வுப் பிரிவும் விசாரணைகள் செய்வதில்லை.  எனவே நான் பாஜகவில் எளிமையாக மட்டுமின்றி அமைதியாகவும் இருக்கிறேன்.  இந்த விசாரணைகள் இல்லாததால் எனக்கு நல்ல தூக்கம் வருகிறது” எனத் தெரிவித்தார். இதையொட்டி மாநிலத்தில் கடும் பரபரப்பு எழுந்ததால் அவரது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக மற்ற தலைவர்கள் சொல்லிச் சமாளித்தனர்.

இதைப் போல் நேற்று முன் தினம் பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் பேசி உள்ளார்.   மகாராஷ்டிர மாநில சாங்க்லி தொகுதியின் பாஜக மக்களவை உறுப்பினர் சஞ்சய் பாட்டில், “அமலாக்கத்துறை உள்ளிட்ட எந்த ஒரு புலனாய்வுத் துறையும் என் பின்னால் வராது.  ஏனென்றால் நான் பாஜகவின் மக்களவை உறுப்பினர்,   எங்களைப் புலனாய்வு அமைப்புக்கள் எதுவும் செய்யாது” எனத் தெரிவித்துள்ளார்.   

தொடர்ந்து பாஜகவினர் இவ்வாறு கூறுவது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை அவர்களே ஒப்புக் கொள்வது போல் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.