தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. பக்தர்கள் அரகரா கோஷடத்தில் கந்த சஷ்டி விழா தொடங்கி உள்ளது. கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 18-ம் தேதி நடைபெறுகிறது.

முருகனின் அறுபடை வீடுகளில் 2வது வீடாக திகழ்வது திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவுக்கு உலகம் முழுவதும்  இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அழகனின் அருளாசி பெற்று செல்வார்கள். ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று நடைபெறும் கந்த சஷ்டி விழாவானது நாட்டின் எத்தனை முருகன் கோவில்கள் இருந்தாலும் செந்தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றதால், இது தனித்துவம் பெற்றது.

இந்த ஆண்டு,  திருச்செந்தூர் முருகன் கோயிலில்  இன்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகியது. முன்னதாக இன்று  அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அதிகாலை  1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து,  2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து யாகசாலையில் பூஜைகளாகியது. காலை 7 மணியளவில் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது.

கந்த சஷ்டி விழாவையொட்டி, யாகசாலையில் இருந்து பகல் 12.45 மணிக்கு  ஜெயந்திநாதர் எழுந்தருளி, வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன், மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேர்வார். அங்கு, தீபாராதனையும் நடைபெறும்.

பின்னர் 5-ம்நாள் வரை அதிகாலை 3மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து, மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடியும், கிரிப்பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் எடுத்தும் தங்கள் விரதத்தை துவக்கினர்.  இதனால் திருக்கோயில் வளாகமே கூட்டத்தில் நிரம்பி வழிகிறது.

சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியாக நவ. 18-ஆம் தேதி சனிக்கிழமை, மாலை 4 மணிக்கு சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.